/indian-express-tamil/media/media_files/2025/08/28/nalini-actress-2025-08-28-10-34-46.jpg)
Nalini
கண்ணாடி போன்ற கண்களும், கள்ளமில்லாப் புன்னகையும் கொண்ட ஒரு நடிகை. 80களின் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். காதல், நகைச்சுவை, குடும்பப் பாத்திரங்கள் என அனைத்துவிதமான வேடங்களிலும் தனது திறமையை நிரூபித்தவர். அவர் வேறு யாருமில்லை, நடிகை நளினி!
அன்றைய காலகட்டத்தில், ஒரு வருடத்தில் 24 படங்கள் வரை நடித்த பெருமைக்குரியவர். பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், மோகன், ராமராஜன் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். அவருடைய வாழ்க்கை சினிமா உலகம் போலவே சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்தது. அதில் மிக முக்கியமானது அவருடைய காதல், திருமணம் மற்றும் விவாகரத்து.
திரையுலகில் உச்சத்தில் இருந்தபோதே, மற்றொரு முன்னணி நடிகரான ராமராஜனுடன் காதல் வயப்பட்டார் நளினி. ராமராஜன் அப்போது உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிறகு, அவர் கதாநாயகனாக உயர்ந்த பின்னரும் அந்தக் காதல் தொடர்ந்து வலுப்பெற்றது. வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையில் 1987-ஆம் ஆண்டு அவர்களின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அருண் மற்றும் அருணா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்து, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கியது. ஆனால், கால ஓட்டத்தில் அவர்களின் திருமண வாழ்க்கையில் சில சவால்கள் எழுந்தன. மேலும், ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட ராமராஜன், ஜோதிடர் ஒருவர் கூறிய வார்த்தைகளால் பிரிவதுதான் நல்லது என்று முடிவெடுத்ததாக நளினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இறுதியில், 2000-ஆம் ஆண்டில் 13 ஆண்டுகள் நீடித்த அவர்களின் திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நளினி தன் மணவாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
”நிச்சயமா அவரோட மறுபடியும் சேர மாட்டேன். நாங்க பிரிஞ்சு இருக்கோம்னா, சண்டை போட்டு, அடிச்சு பிடிச்சு அப்படிலாம் இல்ல. என் பசங்க அவங்க அப்பா கூட நல்லாதான் பேசிக்கிட்டு இருக்காங்க. அதுக்காக நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துதான் வாழணும்னு அவசியம் இல்லை. அவர் அங்க நல்லா இருக்காரு, நான் இங்க நல்லா இருக்கேன்.
தனிமைங்கிறது நிறைய பேருக்கு பெரிய பிரச்சனைதான். தனிமைக்குள்ள சிக்கிக்கிட்டு தப்பான முடிவெடுக்கிறாங்க. அது ரொம்பவே தப்பு. நமக்கு முன்னாடி எவ்வளவு பெரிய வாழ்க்கை இருக்கு! அதை நிறைய பேர் மறந்துடுறாங்க.
இப்போ நிறைய பேர் தப்பான வழியில போறாங்க. நாம யாருக்காக பிறந்தோம்? இன்னொருத்தருக்காகவா பிறந்தோம்? இல்லை, நாம நமக்காகத்தான் பிறந்தோம். நாம ஒருத்தருக்கு குழந்தையாப் பிறக்கறதையே நாமதான் விரும்பித் தேர்ந்தெடுத்தோம். 'இந்த அம்மா, இந்த அப்பா வயித்துல இருந்து நாம பொறக்கணும்'னு நாமதான் நினைச்சோம். வேற யாரும் அதை நமக்கு தீர்மானிக்கலை.
நாமதான் ஒருத்தரை விரும்பி, அவங்களோட சேர்ந்து வாழ்ந்தோம். ஆனா, அது சரிவரலைன்னா, அதுலயே தொங்கிட்டு இருக்கக்கூடாது. அடுத்தது நம்ம கெரியர் என்ன? நம்ம வாழ்க்கை என்ன? போயிக்கிட்டே இருக்கணும். குறைஞ்சபட்சம் நம்ம பெத்தவங்களுக்காகவாவது நாம வாழணும் இல்லையா? ஆனா, அந்த எண்ணம் கூட நிறைய பேருக்கு வர்றது இல்லை. படிச்ச பசங்க கூட தப்பு செய்றாங்க”, என்று அறிவுறுத்துகிறார் நளினி.
வாழ்க்கை என்பது ஒரு தொடர் பயணம். எங்கு ஒரு வழி அடைபடுகிறதோ, அங்கே நின்றுவிடாமல், அடுத்த வழியைத் தேடிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் நளினியின் இந்த வாழ்க்கைப் பாடத்தின் மையக்கருத்து. இந்த எண்ணம் உங்களுக்குள் இருக்கிறதா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.