இளம் காதலர்களின் முன் நிற்கும் சமூகப் பிரச்னைகளை மிக சுவாரஸ்யமாகவும் அழகியல் உணர்ச்சியுடனும் சொன்ன விதத்தில் `அலைகள் ஓய்வதில்லை’ ஒரு முன்னோடித் திரைப்படம்.
ராதா, கார்த்திக் இருவரும் இந்த பட த்தில்தான் அறிமுகமானார்கள்.
மணிவண்ணனின் புத்துணர்ச்சியான கதை - வசனம், பாரதிராஜாவின் தனித்துவமான இயக்கம், B.கண்ணனின் அழகான ஒளிப்பதிவு, இளையராஜாவின் அற்புதமான இசை போன்றவை இந்த படத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாக இருந்தன.
இது இளையராஜாவின் குடும்ப தயாரிப்பு என்பதால் பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் கலக்கியிருப்பார் ராஜா.
இந்த கலைஞர்களுடன், படத்தின் இமாலய வெற்றிக்கு ராதாவும் மிக முக்கியமான காரணம்.
தென்னிந்தியப் பெண்களுக்கே உரிய மாநிறம், அழகான கரிய விழிகள், சற்று ஏறிய நெற்றி, எந்த ஆடையும் பொருந்திப் போகும் கச்சிதமான உடல்வாகு என்று பேரழகியாக படம் முழுக்க உலவினார் ராதா.
ஒருமுறை நடிகை ராதா ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நடித்த போது நிகழ்ந்த சில சுவாரஸ்யமான அனுபவங்கள் குறித்து, ஒரு தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
அப்போ எனக்கு 13 வயசு, ’அலைகள் ஓய்வதில்லை' படத்துல என்னை நடிக்க வைக்க முடிவெடுத்த பாரதிராஜா சார், அதுபத்தி பேசக் கேரளாவிலுள்ள எங்க வீட்டுக்கு ஒருநாள் வந்தார்.
அந்தச் சின்ன வயசுல சினிமா பத்தி எனக்கு எதுவும் தெரியாது.
‘சினிமாவுல நடிக்கப் பிடிக்குமானு அவர் கேட்டா, ஆமா, பிடிக்கும் சொல்லு. நீங்க சொல்லிக் கொடுக்கிறதைப் பார்த்து அப்படியே நடிப்பேன்னு சொல்லுனு’ எங்கம்மா முன்கூட்டியே எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க.
நானும் அவர்கிட்ட அப்படியே சொன்னேன். அப்போ பாரதிராஜா சார் என்கிட்ட சில கேள்விகள் கேட்டார். நான் மலையாளம், இங்கிலிஷ், அரைகுறை தமிழ்னு மூணு மொழிகள்ல கலந்து பதில் சொன்னேன். பாரதிராஜா சார் என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணிட்டாரு.
அந்தப் படத்துக்குப் பிறகு, நடந்ததெல்லாம் மேஜிக்தான். டீன் ஏஜ்லயே முன்னணி ஹீரோயினா ஹோம்லி, கிளாமர் ரோல்னு மாறிமாறி நடிச்சேன்.
/indian-express-tamil/media/media_files/2ejw9Tm5gPCPD7FMcKYQ.jpg)
இந்திய சினிமாவுல யாருக்கும் கிடைக்காத பெருமையா அக்கா அம்பிகாவும் நானும் ஒரே நேரத்துல முன்னணி நடிகைகளா இருந்தோம். எங்களுக்குள் எந்தப் போட்டியும் இருந்ததில்ல. என்னோட காஸ்டியூம், மேக்கப் விஷயங்கள்ல என்னைவிட அம்பிகா அக்காதான் அதிக அக்கறையோடு இருந்தாங்க.
தொடர்ந்து ஓய்வில்லாம நடிச்சேன். அப்போ, அப்பாதான் என்கூட ஷூட்டிங்க்கு வருவார்.. என் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார். இப்போவரை என் அப்பாவின் இழப்பால வருத்தப்படுறேன்.
10 வருஷம் பிஸியா நடிச்சேன். நல்லா சம்பாதிச்சேன்.
பிறகு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இனி நடிக்க வேண்டாம்னு அப்போ முடிவெடுத்தேன். நடிகைகளுக்கு உண்மையான வாழ்க்கை தொடங்கறதே குடும்ப வாழ்க்கையிலதான். அதனால, குடும்ப வாழ்க்கைக்குத்தான் முன்னுரிமை கொடுத்தேன்..
நான் மூணு குழந்தைகளையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். அந்த அம்மா பொறுப்புதான், என் வாழ்க்கையில மிகச் சிறந்த வேலை.
இப்படி பல விஷயங்களை ராதா, அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“