/indian-express-tamil/media/media_files/2025/08/09/revathi-2025-08-09-20-16-01.jpg)
Actress Revathi Manvasanai movie Bharathiraja
1983-ல் ‘மண்வாசனை’ படம் வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை மொத்தமாக கொள்ளையடித்தது. இந்தப் படத்தின் நாயகியான ரேவதி, உண்மையில் கேரளாவைச் சேர்ந்தவர். ஆனால், முதல் படத்திலேயே அச்சு அசல் கிராமத்துப் பெண்ணான முத்துப்பேச்சியாகவே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்தப் படம், ஓராண்டுக்கும் மேலாக பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, தமிழ் சினிமாவில் ரேவதியின் பயணத்துக்குப் பலமான அடித்தளமிட்டது.
'மண்வாசனை' படம், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுக்கும் முதல் திரைப்படம். மூன்று வருட போராட்டத்திற்குப் பிறகே இயக்குநர் பாரதிராஜாவின் கால்ஷீட் கிடைத்தது. ஒருமுறை ரேவதி, சித்ரா லட்சுமணன், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது மண்வாசனை படம் ஷூட்டிங் போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை ரேவதி நினைவு கூர்ந்தார்.
“பாவாடை தாவணில என்னால நடிக்கவே முடியல!”
"மண்வாசனை படத்தில் ஒரு காட்சி, காந்திமதி அக்கா வீட்டுக்குப் போய் அவங்ககிட்ட பேசிட்டே நான் நடந்து போவேன். இந்தக் காட்சிதான் எனக்குப் பெரிய சவாலா இருந்தது. ஏன்னா, நான் அதுவரைக்கும் பாவாடை-தாவணி எல்லாம் போட்டதே இல்ல. அந்தக் கிராமத்துப் பேச்சு, உடல்மொழி எதுவும் எனக்குத் தெரியாது. இந்தக் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. நான் நிஜமாவே நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். என்னால அந்த கதாபாத்திரமா மாறவே முடியலை."
“பாரதிராஜா சார் அடிக்கிறது எனக்கு அடியா தெரியல”
"படத்தின் கிளைமாக்ஸ்ல நான் கத்திப் பேசணும். எனக்குக் கத்துறதுக்கே வரல. அப்போ எனக்கு வெறும் 16 வயசுதான். கத்துறதெல்லாம் வாழ்க்கையில நான் பண்ணதே இல்ல. பாரதிராஜா சார் ஓங்கி என்ன அடிச்சு, கத்துனார். அந்த வேகத்துல நான் கத்திட்டேன். ஆனா அவர் அடிச்சது எனக்கு அடியா தெரியல. அந்தக் கதாபாத்திரத்துக்குள்ள என்னை முழுசா தள்ளுறதுக்காக அவர் அப்படிப் பண்ணியிருக்கார்னு எனக்குத் தோணுச்சு."
“அட பாவமே... ஒரு பொண்ண அடிக்க அவனுக்கு மனசு வரல”
"ஆனா, பாரதிராஜா சார் அடிக்கிறதுக்கு முன்னாடியே பாண்டியன்கிட்ட இருந்து எனக்கு ஒரு அடி கிடைச்சது. ஐயோ... அந்தக் காட்சி இன்னும் ஞாபகம் இருக்கு. மார்க்கெட் சீன்ல பாண்டியன் என்ன அடிக்கணும். ஆனா அவனுக்கு என்னை அடிக்கவே மனசு வரல. அதை பார்த்த பாரதிராஜா சார், 'ஏன்டா... கன்னத்துல அடி, காத தொடாத'ன்னு கத்துனாரு. பாவம்பாண்டியன்! முதல் தடவை ஒரு பொண்ணை அடிக்கிறான். அவனுக்கு வரவே இல்ல. கோவத்துல பாரதிராஜா பாண்டியனை ஒரு அடி அடிச்சுட்டார்."
“ஷாக் ஆகிப்போன ரேவதி!”
"அந்தக் கோபத்துல பாண்டியன் படார்னு என் கன்னத்துல ஒரு அறைவிட்டான். காது ஊஊஊன்னு ஒலிச்சுட்டே இருந்தது. அந்தக் காட்சியில பார்த்தா என் நாலு விரல்களும் பதிஞ்சிருக்கும். அதை நானே அப்புறம்தான் கவனிச்சேன். ஷூட்டிங்ல எல்லாரும் என்னை ஒரு குழந்தையைப் போலதான் பார்த்துகிட்டாங்க. ஒரே ஒரு விஷயத்துல மட்டும்தான் நான் ஆர்ப்பாட்டம் பண்ணி அழுதேன். புடவைய நெஞ்சுல கட்டிட்டு குளிக்கிற ஒரு சீன் அது. அன்னிக்கு ஷூட்டிங்கே நடக்கல."
“என்னோட அங்கிள் கொடுத்த ஐடியா!”
"அப்புறம் என்னோட அங்கிள், என்கிட்ட வந்து, 'இங்க பாரு, இந்தக் கிராமத்துல எல்லாரும் இப்படிதான் குளிப்பாங்க'ன்னு சொன்னார். ஒரு நாலு, அஞ்சு கிராமத்துப் பொண்ணுங்களை வரவெச்சு கேமராவுக்கு வெளியில குளிக்க வச்சாங்க. அந்தக் காட்சி எடுக்கப்படும்போது, அந்தப் பெண்கள் என் கூடவே நின்னு தைரியம் சொன்னாங்க... அதன்பிறகுதான் அந்த சீன் எடுக்கப்பட்டது."
இப்படி பல சுவாரஸ்யமான நினைவுகளை ரேவதி அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.