/indian-express-tamil/media/media_files/2025/09/02/sathya-priya-2025-09-02-11-33-56.jpg)
Actress Sathya Priya
கண் சிமிட்டும் வேகத்தில் மறையும் திரை உலகத்தின் மாய உலகில், சில முகங்கள் மட்டுமே மனதுக்குள் பசுமையாக பதிந்துவிடுகின்றன. அப்படி, பல தலைமுறைகளைக் கடந்து, ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை சத்யபிரியா.
1975 ஆம் ஆண்டில் "மஞ்சள் முகமே வருக" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் சத்யப்ரியா. அதன்பின்னர், சுமார் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் 50-க்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாகவே நடித்துள்ளார் என்பது ஆச்சரியமூட்டும் தகவல். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகுமார், அர்ஜுன், விஜய், அஜித், சூர்யா என பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை இவருக்கு உண்டு.
முக்கியமாக, ரஜினிகாந்தின் "பாட்ஷா" திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த விஜயலட்சுமி என்ற அம்மா கதாபாத்திரம், அவருக்குத் திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. தேவயானியின் தாயாக "சூர்யவம்சம்" படத்தில், ரம்யா கிருஷ்ணனின் தாயாக "படையப்பா" படத்தில், மேலும் "ரோஜா", "சின்ன கவுண்டர்", "சொல்ல மறந்த கதை" போன்ற படங்களில் அவர் நடித்த அழுத்தமான கதாபாத்திரங்கள் ரசிகர்களால் இன்றும் பேசப்படுகின்றன. வெள்ளித்திரையில் மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் சத்யபிரியா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒரு நடிகைக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் அம்மா கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க ஓரங்கட்டப்படும் வேதனையான அனுபவத்தை சத்யபிரியா அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் உடைத்து பேசினார்.
”ஹீரோக்கள் அவங்களை விட சின்ன வயசு நடிகைகளை அம்மா கதாபாத்திரத்துல நடிக்க வைக்கிறதுக்கு ஆசைப்படுவாங்க. இப்ப எனக்கு (சத்ய பிரியா) என்ன வயசுன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த வயசுல இருக்கற அம்மா ரஜினிக்கு இருக்காங்கன்னா, அப்போ ரஜினி ரொம்ப சின்ன பையனா இருப்பாரு. இது ரசிகர்களோட ஃபீலிங். அதனாலதான் அப்படி நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
பணக்காரன் படத்துல நான் ரஜினி சாருக்கு சித்தி. பாட்ஷால அம்மா. ஆனா நான் ரஜினியோட சின்ன வயசுதான். எங்க ரெண்டு பேருக்கும் நாலு அஞ்சு வயசு வித்தியாசம் இருக்கும்”, என்று சத்யா பிரியா அந்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.
திரையுலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைஞராக, தாயாக, குணச்சித்திர நடிகையாகப் பல வேடங்களில் நடித்து, தனது திறமையால் என்றும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சத்யபிரியா. அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும், ரசிகர்களின் நினைவில் நிலைத்து நிற்கும் ஒரு பொக்கிஷம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.