தமிழ் சினிமாவில் தளபதி படத்துக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. இதை தன்னுடைய படமாகவும் தக்க வைத்துக் கொண்ட அதே சமயத்தில், ரஜினியின் படமாகவும் ரசிகர்களை உணர வைத்தது மணிரத்னத்தின் திறமை.
படத்துக்கு இளையராஜாவின் பின்னணி இசை எந்த அளவுக்கு வலு சேர்த்தது என்பதை இப்போது பார்க்கும்போதும் உணரமுடியும்.
இதில் ரஜினியின் காதலியாக, நடித்த ஷோபனா, கண்களிலேயே தன் உரையாடலை நிகழ்த்தினார். ரவுடியாகச் சுற்றும் ரஜினியைப் பார்த்து முதலில் மிரள்வது, பிறகு அவரின் நல்லியல்பைப் புரிந்து கொண்டு தன்னிச்சையாகக் காதலில் விழுவது, திருமணத்திற்குப் பிறகு ரஜினியைச் சந்திப்பது... என ஷோபனாவின் சினிமா பயணத்தில் ‘தளபதி’ ஒரு மறக்க முடியாத படம்.
சமீபத்தில் ஷோபனா சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தளபதி பட ஷூட்டிங் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பற்றி சுஹாசினியிடம் பகிர்ந்து கொண்டார்…
தமிழ்ல நான் நடிச்சதுல தளபதி படம் தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. குறிப்பா அதிகாலை ஷூட்டிங். எனக்கு மணி சார் சொன்னது இப்போவும் ஞாபகம் இருக்கு.. 300 பேரு ஷாட்டுக்கு வரும்போது 3 மணிக்கு.. 301வது ஆளுக்கு ஏன் வர முடியலனு கேட்டாரு…
அந்த படம் எடுக்க டெக்னீக்கலா ரொம்ப கஷ்டப்பட்டாங்க, அந்த படத்துக்கு நிறைய டைம் எடுத்தாங்க. அப்போ நான் ஒன்றரை மாசம் மலையாள பட ஷூட்டிங் முடிச்சுட்டு தளபதி படப்பிடிப்புக்கு வருவேன். எனக்கு 10 நாள் வேலை 17 நாள் ஆகும். அதனால நான் ரொம்ப ஹோம் சிக் ஆயிடுவேன். 10வது நாளுக்கு அப்புறம் நான் இன்னும் எத்தனை நாள் இருக்குனு எண்ண ஆரம்பிச்சுடுவேன்.
மணி சார் என்கிட்ட வந்து இன்னைக்கு வேண்டாம், நாளைக்கு போலோம் சொல்லுவாரு.
இப்போக்கூட தமிழ்நாட்டுல நிறைய பேருக்கு என்னைத் தெரியாது. தளபதி ஹீரோயின் தான் சொல்லுவாங்க. அந்த ஒரு விஷயம் எப்போதும் என்கூட இருக்கு.
சுந்தரி கண்ணால் ஒரு செய்தி பாட்டுல என்னோட மேக்கப் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அப்போ காஸ்ட்யூம் டிசைனர்ஸ்லாம் யாரும் இல்ல. கேமிரா மேன், டைரக்டர், ஆர்ட் டைரக்டர் சேர்ந்துதான் காஸ்ட்யூம்ஸ் பண்ணுவாங்க. இந்த மூணு பேரும்தான் அவுங்களோட கற்பனையில இருந்து இவ்ளோ அழகான ஒரு காட்சி கொண்டு வந்தாங்க.
இதுல நடிச்ச அரவிந்த் சாமி என்னோட ஸ்கூல் ஜூனியர்’, இப்படி பல விஷயங்களை ஷோபனா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“