நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்த நாளையொட்டி கூகுள் நிறுவனம் டூடூல் வெளியிட்டு கவுரவித்துள்ளது.
Advertisment
1963 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ஸ்ரீதேவி. தனது 4வது வயதிலேயே ‘துணைவன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
‘கந்தன் கருணை’, ‘ஆதி பராசக்தி’, ‘நம் நாடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
1976ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில் நடித்ததற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு முதல்முறையாக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து ஹிம்மத்வாலா என்ற ஹிந்தி படத்தின் மூலம் தேசிய அளவிலான நடிகையாக உயர்ந்தார்.
300 படங்களுக்கு மேல் நடித்த ஸ்ரீதேவி, 2000ஆம் ஆண்டு நடிப்பிலிருந்து விலகினார். அதன்பிறகு 2012ஆம் ஆண்டு இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் மூலம் மீண்டும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார்.
மத்திய அரசு நடிகை ஸ்ரீதேவிக்கு 2017ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அப்போது அவர் நடித்த மாம் திரைப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
அதற்கு அடுத்த ஆண்டே 2018-ல் ஸ்ரீதேவி காலமானார். எனினும் இந்திய சினிமா இருக்கும் வரையிலும் ஸ்ரீதேவி என்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு அவரை கவுரவித்துள்ளது. இதனை மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி என்பவர் வடிவமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“