Advertisment

கல் நெஞ்சுக்குள் கசிந்த காதல்

எவா பிரான், கான்வென்டில் படித்து முடித்த பெண். தனக்கு பதினேழு வயது இருக்கும் போது புகைப்பட கலைஞரிடம் உதவியாளராக இருந்தார். அவர் ஹிட்லரின் புகைப்பட கலைஞர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Adolf Hitler

Adolf Hitler

த. வளவன்

Advertisment

காதல் என்றாலே நம் அனைவரின் மனதில் வருவது ரோமியோ ஜூலியட், ஷாஜகான் மும்தாஜ், லைலா மஜ்னு போன்றவர்கள்தான். ஆனால் இந்த  கட்டுரையில்  நாம் பார்க்க இருப்பது அப்படிப்பட்ட ஒரு மென்மையான காதல் கதை அல்ல; நாடி நரம்புகளில் இரத்த வெறி கொண்ட ஒருவரின் முரட்டுத்தனமான காதல் கதை.

அடால்ஃப் ஹிட்லர். இவருக்கு அறிமுகமோ , முகவரியோ தேவையில்லை. இவரின் பெயர் எவரின் செவியில் விழுந்தாலும், அடுத்த கணமே மனதில் தோன்றுவது  ஆயிரமாயிரம் பேரை கொன்று குவித்த கொடூரன் என்பதே. ஹிட்லரை போர்க்கள புயல் என்று கூட நாஜி படையில் அழைப்பார்கள். போர்க்களம் என்று வந்துவிட்டால் வானம் இடிந்து கீழே விழுந்தாலும் கூட ஹிட்லரின் எண்ணம் எதிரியின் நெற்றிப் பொட்டை தான் குறிவைக்கும். அப்படிப்பட்ட ஹிட்லரின் இதயக் கதவை மெல்ல திறந்த காதலி அவரது இறுதி பகுதியில் தான் மனைவியாக அங்கீகரிக்கப் பட்டார் என்பது நிறைய பேருக்கு தெரியாது. 

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டி பார்த்தால் ஹிட்லர் ஒரு தேசியவாதியாகவே ஆரம்ப காலங்களில் இருந்தார். அதாவது, எங்கள் நிலத்தில் எங்கள் இனத்தார் தான் ஆள வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர் ஹிட்லர். அது காலப்போக்கில், யூத இனமே அழியும் நிலைக்கு  கொண்டு வந்து நிறுத்தியது. ஹிட்லர் ஒவ்வொருவரின் கண்களிலும் ஒவ்வொரு பரிணாமத்தில் தெரிந்தார். நாஜி படையினருக்கு போர் வீரனாக, யூதர்களுக்கு கொடூர வேட்டை மிருகமாக, உலக மக்களுக்கு சர்வாதிகாரியாக தெரிந்தார். ஆனால் ஒருவருக்கு மட்டும் மனம் கவர்ந்த காதலனாக தெரிந்தார் ஹிட்லர். அவர்தான் எவா. ஹிட்லரின் மன கோட்டையை தகர்த்து உள்ளே குடியமர்ந்தவர்தான் இந்த எவா.

எந்நேரமும் ரத்தமும் சதையுமாக போர் செய்பவர், குருதியெல்லாம் வெற்றியை மட்டுமே தழுவ வேண்டும் என்று உறுதி பூண்டிருந்த ஹிட்லரா காதல் செய்தார்? ஆம் அழகான காதல் கதைக்கு சொந்தக்காரர்தான் ஹிட்லர். எவா பிரான், கான்வென்டில் படித்து முடித்த பெண். தனக்கு பதினேழு வயது இருக்கும் போது புகைப்பட கலைஞரிடம் உதவியாளராக இருந்தார். அவர் ஹிட்லரின் புகைப்பட கலைஞர். அப்போதுதான் முதன் முதலில் ஹிட்லரை சந்திக்கிறார் இந்த பதினேழு வயது இளம்பெண். இவர் ஹிட்லரைச் சந்திக்கும்போது, அவர் அப்போதுதான் நாசி படைகளின் துணை கொண்டு உலக அரங்கில் பேசப்பட்டவராக இருந்தார், அவருக்கு வயதோ நாற்பது. காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். கண்டிப்பாக இந்த காதல் கதையை கேட்கும் போது அப்படித்தான் தெரிகிறது. உலகமே பார்த்து அஞ்சிக் கொண்டிருந்த மனிதனை முதல் முறை சந்திப்பின் போதே அவரை பார்த்து காதல் வலையில் சிக்கியிருக்கிறார் இந்த எவா பிரான். ஹிட்லர் எவாவை நேரில் சந்தித்தபோது, "ஏன் இப்படி விழுங்குவது போன்று பார்க்கிறாய்? " என்று கேட்டாராம்.  அவ்வளவு தான் எவாவுக்கு தலைகால் புரியவில்லை, தன் தங்கைக்கு ஹிட்லர் என்ற ஒரு மாமனிதனைப் பார்த்தேன், அவரின் மீது காதல் வயப்பட்டேன் என்று கடிதம் எழுதியிருந்தார்.

ஹிட்லர் தன் காதலை பெரிதாக வெளிப்படுத்தியதில்லை. ஆனால் மனதில் சுமந்தார். அவர் வெளிப்படுத்தாததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இவர்களுக்கிடையில் நெருக்கம் அதிகமாக, ஹிட்லர் எவாவை தன்னுடனே தங்க வைத்தார். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று இவர்களின் குடும்பத்தார்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது. மற்றவர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்தால், எவாவை தனியாக ஒரு அறைக்கு அனுப்பி விடுவாராம் ஹிட்லர்.

publive-image

Eva Braun with Adolf Hitler (Image: Wikimedia Commons)

எவா, ஹிட்லர் மீது கொண்ட காதலால் 3 முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதில் இரண்டு முறை உயிர் தப்பித்துவிட்டார். முதல் முறை ஹிட்லரின் கவனத்தைத் திருப்பத் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார், இரண்டாவது முறை மூன்று மாதம் எவாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற ஏக்கத்தில் முப்பத்தி ஐந்து தூக்க மாத்திரைகளை உட்கொள்ள இருந்தாராம். ஆனால் அன்று ஹிட்லர் அவரை பார்க்க வந்துவிட்டதால் அது வெறும் முயற்சியாகவே முடிந்தது. மூன்றாவது முறை ஹிட்லர் தற்கொலை செய்யப்போவதால், எவா இனி தன்னால் தனியாக வாழ இயலாது என்று தற்கொலை செய்துகொண்டார், சயனைட்  உட்கொண்டு இறந்துவிட்டார். எவா, ஹிட்லர் போட்ட அனைத்து விதிகளையும் தாண்டாமல் உண்மையாக இருந்தது கண்டிப்பாக அவரின் மீது உள்ள பயம் கிடையாது, அது காதலே. அத்தனை ரகசியங்களையும் உடைத்துக்கொண்டு அவர்கள் காதல் வெளியே வர இருந்தது, அதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, ஜெர்மனியை வெல்ல இருந்தது. அந்த நேரத்தில் தான் எவா ஹிட்லரை திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தி மூன்று, ஹிட்லருக்கு ஐம்பத்தாறு. 

ஹிட்லர் மீதுமட்டும் காதல் இருந்ததால், ஹிட்லரின் அரசியல் வாழ்க்கையை ஒருபோதும் கேட்காத பெண்ணாக இருந்திருக்கிறார். காதலுக்காக விட்டுக்கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த பெண்கள் என்று பலர் இருக்கின்றனர். ஹிட்லர் எவாவை பற்றி பலரும் பலவித ஆருடங்களைப் பரப்பிவிட்டனர். ஆனால் ஹிட்லருக்கு மட்டுமே தெரிந்திருந்தது அவர் எவாவை எவ்வளவு காதலித்தார் என்று.

எத்தனை வலிமைமிகு மனிதனாக இருந்தாலும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உந்துகோல் தேவைப்படும் மீண்டும் எழுந்து வர. ஹிட்லருக்கு உந்துசக்தியாக இருந்தது எவா. ஹிட்லரை போர்க்கள புயல் என்கிறோம், அவருடைய முதுகெலும்பாக இருந்தது எவா. அவர் கொடுத்த ஊக்கமும், தன்னம்பிக்கையும் ஹிட்லரை மேலும் வலுப் பெற செய்தது. ஹிட்லர்-எவா 16 வருடம் காதலித்தனர். அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் சூழ்ந்தது. ஹிட்லரின் படை தாக்கப்பட்டது. அவரது சர்வாதிகாரமும் முடிவுக்கு வந்தது.

பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலையை  அடைந்தது. பெர்லினில் தன்னுடைய பதுங்கு குழியை சீர்செய்தார் ஹிட்லர், பின்னர் அந்த பங்கரில்தான் சில நாட்கள் இருந்தார். ஹிட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்த்தான் இவரின் நண்பரும், இத்தாலியின் சர்வாதிகாரியுமான முஸோலினியும், அவரது மனைவியும் கொல்லப் பட்டிருந்தனர். அத்துடன் அவர்களது உடல்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு அவமரியாதை செய்யப் பட்டிருந்தது. இதனை ஹிட்லர் அறிந்திருந்தார். எதிரிகளிடம் தங்களது உடல்கள் எக்காரணம் கொண்டும், சிக்கிவிடக் கூடாது என்று முடிவு செய்தார். ஏப்ரல் 30 1945 அன்று ஹிட்லர் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அப்போதுதான் எவா சொன்னார் நீங்கள் இல்லாத உலகில் நானும் வாழ மாட்டேன் என்று. மரணத்தின் விளிம்பில் நிற்கும் போது ஹிட்லர் எவாவை திருமணம் செய்துகொண்டார். பின்னர், ஏப்ரல் 30 அன்று அந்தி மாலைப் பொழுதில் ஹிட்லரும்- எவாவும் தங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டனர், சிறிது நேரத்திற்குப் பிறகு சத்தமே இல்லை என்பதால் காவலர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது ஹிட்லர் ரத்தக் கரையுடன் கிடந்தார். அருகிலேயே எவாவும் தன்னுடைய, காதல் கணவருக்காக தன் இன்னுயிர் நீத்திருந்தார். பதினாறு வருட காதல் பயணம், நாற்பதே மணிநேரத்துக்குள் முடிந்த திருமண வாழ்க்கை. அந்த கல்நெஞ்சுக்குள்ளும் காதல் கசிந்திருந்தது. மரணத்திற்குப் பிறகு காற்றில் கலந்தது அவர்களுடைய காதல்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment