இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலத்தில், இந்த மாதம் முதல் குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய அம்சம் கொண்டது குறிஞ்சி மலர். உலகத்தில் எத்தனை அழகான மலர்கள் பூத்திருந்தாலும், குறிஞ்சி மலரை காண மக்கள் 12 ஆண்டுகள் தவம் இருக்கத்தான் வேண்டும். அத்தகைய தவத்திற்கு பலனாக, கண்முன்னே பட்டாடை போல கோடிக்கணக்கில் மலர்ந்திருக்கும் குறிஞ்சியை பார்ப்பது போல வேறு ஒரு வரம் உண்டா?
அத்தகை காத்திருத்தலுக்கு கிடைத்த பரிசாய், கேரள மாநிலத்தில் இந்த மாதம் முதல் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது. இந்த மாதத்தின் மத்தியில் இருந்து பொதுமக்களின் பார்வைக்காக குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கும் இடங்கள் திறக்க வைக்கப்பட உள்ளது. மூணார், எரவிக்குளம், வட்டவட, கோவிலூர், கடவாரி மற்றும் ராஜமலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் குறிஞ்சி மலர் காட்சியை காணலாம் என்று கேரள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் குறிஞ்சி மலர் காட்சிக்காக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கையின் மேஜிக் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடைபெறும் நீங்களும் சென்று காண தயாராகுங்கள்.