மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரபல வைணவத் தலமான அழகர்கோவிலில், ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருமாலிருஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் போற்றப்படும் இக்கோவிலில், இன்று காலை 9.15 மணியளவில் தங்க கொடிமரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் தோரணமாலைகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டது.
திருவிழாவின் தொடர்ச்சியான நிகழ்வுகள் வருமாறு:-
1ம் தேதி இரவு – அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு
2ம் தேதி – காலை தங்க பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடு
3ம் தேதி – காலை வழக்கம்போல் புறப்பாடு, இரவு அனுமான் வாகனம்
4ம் தேதி இரவு – கருடன் வாகனம்
5ம் தேதி காலை – மதுரை சாலையிலுள்ள மறவர் மண்டபத்துக்குச் சுவாமி எழுந்தருளி திரும்புவார். இரவு சேஷவாகனம்
6ம் தேதி இரவு – யானை வாகனம்
7ம் தேதி – காலை சூர்ணோத்சவம், இரவு புஷ்ப சப்பரம்
8ம் தேதி இரவு – தங்கக் குதிரை வாகனம்
9ம் தேதி – அதிகாலை சுவாமி தேருக்கு எழுந்தருளல், காலை 8.40–8.55 மணிக்குள் தேரோட்டம், இரவு புஷ்ப பல்லக்கு உலா
அதே நாளில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் திருக்கதவுகள் திறக்கப்பட்டு படிப்பூஜை, தீபாராதனை, சந்தனச் சாத்துதல் நடைபெறும்
10 ம் தேதி காலை – தீர்த்தவாரி, இரவு சப்தவர்ணம் மற்றும் புஷ்பசப்பரம்
11ம் தேதி – உற்சவசாந்தி நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறும்.
இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில், துணை ஆணையர் யக்ஞநாராயணன், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ பெரியபுள்ளான், கோவில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சிபுரி நியாந்த், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணாதேவி, மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.