மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்பட்டாலும், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் மதுப்பழக்கம் அதிகரித்து வருவது, தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டாக்டர் ஷ்ரே ஸ்ரீவாஸ்தவா இதுகுறித்து பேசும்போது, "இளைஞர்கள் மத்தியில், வயதானவர்களை விட மது அருந்தும் பழக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு நண்பர்களின் அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் கல்லூரி காலத்திலோ (அ) வேலைக்குச் சென்ற பிறகோ குடிக்கத் தொடங்குகிறார்கள். குறைந்த சம்பளம் காரணமாக, மலிவான மதுவை உட்கொள்கிறார்கள். இது கடுமையான கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கிறது" என்று indianexpress.com செய்திக்கு தெரிவித்தார்.
மதுப்பழக்கம் காரணமாக, இளைஞர்களுக்கு ஹெபடைடிஸ் போன்ற தீவிர கல்லீரல் நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருவதாக டாக்டர் ஸ்ரீவாஸ்தவா கூறினார். இது இதயம், சிறுநீரகங்கள் போன்ற பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும். அதிகப்படியான மது அருந்துவதால், இளைஞர்கள் மத்தியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான விகிதமும் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மது அருந்துபவர்களின் ஆயுட்காலம் கணிசமாகக் குறைகிறது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். "மது அருந்துபவர்களின் உயிர்வாழும் வயது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது 70-75 ஆண்டுகளிலிருந்து 55-60 ஆண்டுகளாக குறைகிறது" என்று டாக்டர் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
வயதுக்கேற்ற பாதுகாப்பான மது அளவு
ஒரு நிலையான பானத்தில் சுமார் 14 கிராம் தூய ஆல்கஹால் உள்ளது, இது தோராயமாக 44 மில்லி விஸ்கி, 148 மில்லி ஒயின் அல்லது 355 மில்லி பீருக்கு சமம். 15-39 வயதுடையவர்களுக்கு, ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆல்கஹால் அளவு 0.136 நிலையான பானங்கள் ஆகும். இந்த வயதிற்குட்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 0.273 பானங்கள் ஆகும். 40 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு, வேறு எந்த உடல்நல பிரச்னை இல்லை என்றால், பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு நிலையான பானங்களில் பாதி (ஆண்களுக்கு 0.527 பானங்கள், பெண்களுக்கு 0.562 பானங்கள்) முதல் தோராயமாக 2 நிலையான பானங்கள் (ஆண்களுக்கு 1.69 பானங்கள் மற்றும் பெண்களுக்கு 1.82). 65 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு, ஒருநாளைக்கு 3 பானங்கள் (ஆண்களுக்கு 3.19 பானங்கள், பெண்களுக்கு 3.51 பானங்கள்) பரிந்துரைக்கப்படுகிறது.
டாக்டர் ஸ்ரீவாஸ்தவாவின் கூற்றுப்படி, பீர், ஒயின், விஸ்கி என எந்த வகையான மது அருந்தினாலும், ஒரு வாரத்தில் 10 நிலையான பானங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு பானம் என்பது 15-30 மில்லி அளவில் இருக்க வேண்டும். எந்த வயதினருக்கும் மது அருந்துவது பரிந்துரைக்கப்படவில்லை என்றும், எந்த ஒரு நோயையும் தடுக்க எந்த மருத்துவரும் மது அருந்தும்படி அறிவுறுத்த மாட்டார் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.