இந்தியாவின் மிகவும் பிரபலமான அமர்நாத் யாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இது மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ளலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி மற்றும் நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் 100 கிளைகளில் ஜூன் 30-ஆம் தேதி வரை 13 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களுக்கான யாத்திரை பதிவு திறக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் சன்னதி வாரியத்திற்கு அருகிலுள்ள நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இருந்து பயணிகள் தங்கள் சுகாதாரச் சான்றிதழ்களைப் பெற வேண்டும்.
யாத்திரைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, நீங்கள் ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரிய இணையதளத்தைப் பார்வையிடலாம். ‘Whats New’ என்பதைக் கிளிக் செய்து, ‘Register Online’ விருப்பத்தை கிளிக் செய்து, தேவையான விவரங்களை நிரப்பவும்.
உங்களுக்கு RFID குறிச்சொற்கள் வழங்கப்படும், இது ஒவ்வொரு யாத்ரீகர் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் கண்காணிக்க ஆலய வாரியத்திற்கு உதவுகிறது. பதிவை முடிக்க உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கட்டாய சுகாதாரச் சான்றிதழ், நான்கு பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தேவைப்படும்.
இந்தியாவில் உள்ள பல முக்கியமான சிவன் கோவில்களில் ஒன்றான அமர்நாத், கோடையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். அனைத்துப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இந்த ஆலயம், ஸ்டாலக்மைட் வடிவத்தில் உள்ள ஒரு பனி சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறீர்கள் என்றால், அமர்நாத் மற்றும் சிவலிங்கத்திற்கான மலையேற்றத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே:
முக்கிய குகை கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டின் பெரும்பகுதி பனியில் மூடியிருக்கும். இதன் மூலம் கோடை காலத்தில் யாத்திரைக்கு ஒரு குறுகிய சாளரத்தை அனுமதிக்கிறது.
அமர்நாத் குகையில்’ சிவபெருமான் வாழ்வு மற்றும் நித்தியத்தின் ரகசியமான அமர்கதையை பார்வதி தேவிக்கு விவரித்தார், மேலும் அதை ரகசியமாக வைக்க விரும்பினார்.
அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன – பால்டால் வழியாக குறுகிய பாதை மற்றும் ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாரம்பரிய வழி. நீங்கள் ஜம்முவிலிருந்து பஹல்காம் மற்றும் பால்டலுக்கு தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது அரசுப் போக்குவரத்து பேருந்துகளில் செல்லலாம்.
நீங்கள் ஸ்ரீநகர் அல்லது பஹல்காமில் இருந்து தொடங்கினால், நீங்கள் 14,000 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்வீர்கள், அதாவது பயணத்தை மேற்கொள்வதற்கு நீங்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் விரும்பினால், குகைக்கு ஹெலிகாப்டர் பயணத்தை முன்பதிவு செய்வதன் மூலம் நீண்ட கடினமான மலையேற்றத்தைத் தவிர்க்கலாம். ஹெலிகாப்டர் சேவைகளைப் பெற, நீங்கள் பயணத்திற்குத் தகுதியானவர் என்பதைச் சான்றளிக்க, யாத்ரா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் இருந்து மருத்துவத் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“