கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா செல்வதை பலரும் விரும்புகிறார்கள். குடும்பத்துடன் ஊட்டி (அ) கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்த இரண்டுமே தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோடை வாசல் தலம் என்பதால் பலரும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டி, கொடைக்கானலில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதால் சிலர், கொடைக்கானல் அருகே கூட்டமே இல்லாத சுற்றுலா தலங்களை தேடுகிறார்கள். அவர்கள் கொடைக்கானல் வரும் போதே சில சுற்றுலா தலங்களை ரசிக்கலாம்.
கொடைக்கானலுக்கு பலர் தற்போது சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கொடைக்கானலில் கிளைமேட் அருமையாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் எல்லாம் அதிகமாக உள்ளது. இதனால், ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு போய் ரசிக்க விரும்புகிறார்கள். அதேநேரம் ஏற்கனவே பலமுறை கொடைக்கானல் வந்தவர்களுமே புதிய இடங்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.
கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு, காட்ரோடு வழியாக இல்லாமல், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சித்தரேவு வழியாக தாண்டிக்குடி வந்து, அதன்பிறகு பண்ணைக்காடு வந்து வழக்கம்போல் கொடைக்கானல் போகலாம். ஆனால், இந்த சாலை கொஞ்சம் ஆபத்தானது. இந்த சாலையில்தான் புல்லவெளி அருவி உள்ளது. வாட்ச் டவர் உள்ளது. இவை எல்லாம் இல்லாமல் வழியில் நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன.
தாண்டிக்குடி கடல் மட்டத்தில் இருந்து 3,705 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எனவே இங்கு ஆண்டு முழுவதும் காலநிலை ஓரளவு குளிர்ச்சியாகவே இருக்கும். கொடைக்கானல் அளவிற்கு இருக்காது என்றாலும், ஓரளவு நல்ல குளிரான காலநிலை காணப்படும். தாண்டிக்குடி செல்லும் சாலையில் சித்தரேவு வரை சமவெளியாக இருக்கும். அடுத்து சித்தரேவிலிருந்து 31 கி.மீ. தொலைவில் பழநிக்கும், கொடைக்கானலுக்கும் நடுவே தாண்டிக்குடி மலை கிராமம் இருக்கிறது. தாண்டிக்குடி அருகே மங்களம்கொம்பு, பன்றிமலை, பண்ணைக்காடு, தடியன்குடிசை உட்பட மலைப்பகுதிகள் சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்கு ஏற்ற இடங்கள் ஆகும்.
தாண்டிக்குடியில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் உள்ளது. ஆதிவாசிகளின் குகை ஒன்று உள்ளது. இதேபோல் தாண்டிக்குடி அருகே உள்ள பண்ணைக்காடு முருகன் கோவில் 2,000 வருடம் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இதுவும் பலருக்கும் பிடிக்கும். அதேபோல், கொடைக்கானலுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாகவும் செல்லலாம். இந்த சாலையில் கும்பக்கரை அருவி இருக்கிறது. இங்கு ஆனந்தமாக குளித்துவிட்டு அப்படியே மலையில் ஏறலாம்.
இந்த சாலை முழுக்க தென்னை மரங்களும், மாமரங்களும் மனதை மெய்சிலிர்க்க வைக்கும். அதேபோல் கும்பக்கரையில் இருந்து செக்போஸ்டை கடந்து பெருமாள் மலை நோக்கி செல்லும் சாலையில் மிக செங்குத்தான சாலையில் பயணிப்பார்கள். எல்லாமே கொண்டை ஊசி வளைவாக இருக்கும். இந்த சாலையில் காட்டு மாடுகளை காண முடியும் (மாலையில் (அ) இரவில் எக்காரணம் கொண்டும் வரவே கூடாது). மலையில் ஏறி 10 கி.மீ. பயணித்த உடனேயே அங்கு அடுக்கம் என்ற அழகான கிராமம் வந்துவிடும். அந்த கிராமத்தில்தான் அவகோடா அதிகம் விளைகிறது. மலை வாழையும் அதிகம் விளைகிறது. அங்கிருந்து பெருமாள் மழை ஆரஞ்சு தோட்டங்களையும், மலை வாழை தோட்டங்களையும் காண முடியும்.
பேருந்துகளே வராத அந்த சாலையில், கார்களும் பைக்குகளும் குறைவாகவே செல்லும். அந்த சாலையில் பெருமாள் மலையை அடைந்தால், அங்கிருந்து வழக்கம் போல் கொடைக்கானல் செல்லலாம், இதேபோல் கொடைக்கானலில் மன்னவனூர், கூக்கால், வில்பட்டி போன்ற பகுதிகளும் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் அளவிற்கு அற்புதமான இடங்களை கொண்டுள்ளன.
இன்னும் தெளிவான தகவல்களை உள்ளூர் மக்களிடம் கேட்டால் சொல்வார்கள். கொடைக்கானலில் எங்கு சாப்பாடு நன்றாக இருக்கும்.. எங்கு சாப்பாடு குறைவாகே இருக்கும்.. எங்கு தங்கினால் குறைவான கட்டணம் என்பதை உள்ளூர் மக்கள் நன்கு அறிவார்கள்.. அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல் குடிப்பதற்காகவே இன்றைக்கு நண்பர்கள் குழுவினர் கொடைக்கானல் போகிறார்கள். குடிப்பவர்கள் தயவு செய்து வாகனம் ஓட்ட வேண்டாம். அதேபோல் பகலில் குடித்து விட்டு சுற்ற வேண்டாம். மலைப்பிரதேசம் என்பதால் கண்டிப்பாக உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் ஆகும்.