சென்னையில் ஒரு நாள்... மழை விட்டுச் சென்ற நினைவுகள்!

ஜனார்தன் கௌஷிக்

வெச்சா குடுமி சரிச்சா மொட்டை என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் சென்னை மழை தான். வெயில் அடித்தால் சுளீரென்று என்று அடிக்கும், தமிழ் நாட்டில் மற்ற  மாநிலத்தில் இருந்து வருபவர்களும் சென்னை வெயில் சுத்தமா முடியல என்று அலுத்து கொள்வார்கள்.

அதேசமயம், மழை என்றால் முழங்கால் அளவு தண்ணீர் நிற்கும், அது தான் சென்னை.

எப்பொழுதும் போல் நான் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வருவதற்கு தயாராகி கொண்டிருந்தேன். வெளியில் தலையை எட்டி பார்த்தால் வானத்தை கிழித்து கொண்டு மழை கொட்டியது. சரி சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும் என்று எக்ஸ்ட்ரா டைம் வேலை செய்தேன்.

அந்த மழை, நான் வேலை செய்த ஆபிஸ்க்கு உதவி புரிந்தது. மீண்டும் தலையை எட்டி பார்த்தேன், திரும்பவும் அதே வேகத்துடன் மழைபெய்து கொண்டிருந்தது. இன்னிக்கு நம்ம கதை அம்பேல் என்று யோசித்து கொண்டு லிப்ட்டில் கீழ் தளத்திற்கு வந்து சேர்ந்தேன்.

பைக்கை எடுத்து சிறிது தூரம் தான் கடந்து இருப்பேன், மழையின் சீற்றம் அதிகரித்தது, எதிரில் வருபவர் யார் என்று கூட தெரியாத அளவு மழை, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பஸ் ஸ்டாண்ட் உள்ளே சென்றேன். பல விதமான மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்யும் முக்கிய இடங்களில் பஸ் ஸ்டாண்டும் ஒன்று.

அனுதாபம்: 

நிற்க கூட இடம் இல்லாத அந்த சிறிய பஸ் ஸ்டாண்டினுள் ஆறு பேர் இடித்து கொண்டு, மழையில் இருந்து காப்பற்றி கொள்ள நின்று கொண்டிருந்தோம். திடீரென ஒருவர், சத்தமாக ரோட்டில் செல்பவர்களை சரமாரியாக திட்டி கொண்டிருந்தார். யார் என்று பார்த்தேன், என்னை பார்த்து காசு கொடு என்றார். மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்த மழையில் உடம்பை மறைப்பதற்கு கூட ஆடை இல்லாமல் இப்படி இருக்கின்றாரே, இவர் எங்கே உறங்குவார். இங்கேயே இருப்பாரா போன்ற சிந்தனைகள் என்னுள் தோன்ற, இல்லை.. என்று சொல்லிவிட்டு நான் திரும்பவும் என் இடத்திற்கு சென்று நின்றுக் கொண்டேன்.

அந்த மனநிலை பாதிக்கப்பட்டவரின் முகம் எனக்கு மறையவே இல்லை, ஏனோ மனதில் அவர் மீது அனுதாப அலையை ஏற்படுத்தியது.

கோபம்  :

அப்போது,  ஒருவர் பக்கத்தில் நின்று கொண்டு என்னிடம் பேச்சு கொடுத்தார், “கேரளா போல ஆகிவிடும்  போல இருக்கு நம்ம ஊரும், என்ன மழைப் பா,” என்றார். நானும் ’ஆமா’ என்று சிறிது தலையை ஆட்டினேன்.

நான் மழை நின்று விட்டதா என்று மறுபடியும் எட்டி பார்க்க சென்றேன். சாரி பெட்டர் லக் நெஸ்ட் டைம் (Sorry, Better Luck Next time) என்று சொல்லி அனுப்பியது மழை. வேறு வழியின்றி உள்ளே மறுபடியும் வந்தேன். என் அருகில் நின்று பேசி கொண்டிருந்தவன் ( மரியாதை குறைந்ததற்கு காரணம் அவனே தான்) சுற்றும் முற்றும் பார்த்தான்,.

அவன், அங்கே நின்று கொண்டிருந்தவர்களை பற்றி ஒரு துளி கூட கவலை படாமல், தன்னுடைய பேண்ட்டை  கழற்றி சிறுநீர் கழிக்க தொடங்கினான். ”இது பொது இடம், அனைவரும் நடமாடும் பகுதி, மழையினால் இடம் கூட இல்லாமல் நெருக்கமாக  நின்றுக் கொண்டிருக்கிறோம் ”  இந்த சிந்தனைகளில் ஒன்றுக் கூட அவன் மனதில் இல்லை. தன் வேலை முடிந்த உடன் அவன் சென்று விட்டான்.

மிகுந்த கோபத்துடன் நின்று கொண்டு இருந்தேன். 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பஸ்ஸில் இருந்து இறங்கினாள். பஸ் ஸ்டாண்டிருக்கும் பஸ் நிறுத்திய இடத்திற்கும் ஒரு இரண்டடி தூரம் தான் இருக்கும். அவள் பஸ் இல் இருந்து நேராக தேங்கி இருந்த மழை தண்ணீரில் குதித்தாள், அவள் குதித்த வேகத்தில் அந்த சேறு கலந்த தண்ணீர் அருகில் நின்றவர்கள் மீது பட்டது, அதை அவள் கண்டுக்கவே இல்லை.

இதுக்கே இப்படி நா, இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என்று வடிவேலு டயலாக் பாணியில் வருவது போல், அவள் குதித்த பின்பு, தன் கையில் வைத்திருந்த குடையை பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று ஒரு நொடி கூட யோசிக்காமல் விரித்தாள். அதில் இருந்த மழை நீர்  அங்கே உக்காந்து இருந்தவர் மீது பளிச்சென்று பட்டது, அந்த குடைக் கம்பியை சற்று நான் சுதாரிக்காமல் இருந்துருந்தால் என் கண்களை ஒரு கை பார்த்து இருக்கும்.

“என் மா, மனுஷங்க நிக்கறது தெரியலயா, இப்படியா குடைய விரிகிற,” என்றார் உட்கார்ந்து இருந்த அந்த நபர். “ஆள் போகணும், மழையா இருக்குது, நான் என்ன பண்றது,” என்று அந்த நபர் தவறு செய்தது போல் இவள் முறைத்தாள். எனக்கு இதுக்கு மேல முடியாது சாமி என்பது போல் இருந்தது. மழை விடுவது போல் தெரியவில்லை. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று என் பைக் ஐ எடுத்து சர்ரென்று பறந்தேன்- இல்லை ஊர்ந்து சென்றேன். சென்னையில் இரவு 6-8 மணிக்கு எந்த அளவிற்கு வாகன நெரிசல் இருக்கும் என்று ஆபீஸ் போகிற எல்லாருக்கும் தெரியும், இதில் மழை பெய்தால், கேட்கவே வேண்டாம்.

மன அழுத்தம் :

போகிற போக்கில் காசு செலவின்றி உங்களுக்கு ஃபேஸ் கிளீனிங் செய்து விட்டு செல்வார்கள் உங்கள் சக பயணியர். எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் கொஞ்சம் ஸ்பீட் கம்மியாக சென்று விட்டீர்கள் என்றால் உங்களை முந்தி செல்லும் ஒரு வாகனம், அந்த வாகனத்தில் இருந்து வரும் தண்ணீர் உங்கள் முகம் முழுவதையும் சுத்தம் செய்து விடும். இது பரவாயில்லை என்பது போல், போகவே இடம் இல்லாத நிலையில் பின்னிலையில் இருந்து கார் ஒன்று என் வண்டி மீது லேசாக மோதியது, இருக்கின்ற கோபத்தில் என்ன? என்பது போல் நான் அந்த கார் ஓட்டியவரை கேட்டேன், முன்னாடி போகலாம் போ என்பது போல் அவர் செய்கை காட்டினார்.

இங்க எங்க போவது என்று நானும் செய்கை காட்டி மனதில் திட்டி கொண்டேன். மழை, புகை, வாகன நெரிசல் என்று ரஜினி சொல்வது போல் ஒரு நிமிஷம் தலையே சுற்றியது. மன அழுத்தம் இப்படி எல்லாம் கூட வருமா என்பது போல் இருந்தது.

நெகிழ்ச்சி: 

சிறிது மழை விட்டது போல் தோன்றிய நிலையில், இது வெறும் டீஸர் தான் என்பது போல் தன் முழு வேகத்துடன் மழை மறுபடியும் கொட்ட தொடங்கியது. தோளில் மாட்டியிருந்த என் பையினுள் எனது லேப்டாப் மற்றும் மொபைல் இருந்தது. நாம் நினைந்தாலும் பரவாயில்லை, பை நினைந்தால் பெரிய செலவாகி விடும் என்று சாலையின் ஓரத்தில் பைக்கை நிறுத்தினேன்.

அங்கே ஒரு கடைக்குள் சென்று சற்று மழை நின்ற உடன் செல்லலாம் என்று இருந்தேன். உள்ளே சென்ற பின்பு தான் தெரிந்தது அது இறுதி சடங்களுக்கு உபகரணங்களை வழங்கும் கடை.  “அக்கா உள்ள லேப்டாப் இருக்கு, மழைல நெனைஞ்சிருக்கு, கொஞ்சம் உள்ள எடுத்து வெச்சிக்கிறீங்களா,” என்று நான் கேட்டேன், அந்த அக்காவும் சரி என்றார்கள். எனது மொபைலையும் கொடுத்தேன். அவர்கள் உட்கார்ந்து இருந்த மேஜை மேல் வைத்தார்கள்.

நான் பேசிக்கொண்ட இருக்கும் போது, இடையில் ஒரு ஆள் வந்தார். “சாவிய எங்க வெச்சேனு தெரியல”, என்று சொல்லி கொண்டே தேட ஆரமித்தார். “இங்க தான் இருக்கும்னு நெனைக்கிறேன்”, என்று, சுற்றும் முற்றும் தேடியவர் தீடிரென்று பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த, இறந்தவர்கள் உடலை சுமக்கும் ஐஸ் பாக்ஸ் உள் கையை 10 4விட்டு தேடி அவரது சாவியை கண்டுபிடித்தார்.

எனக்கு புருவங்கள் உயர்ந்தது. இவர்கள் வாழ்வு எப்படி இருக்கிறது? என்று என் மனதிற்குள் கேட்டுக்கொண்டேன்.ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு, மழை லேசாக நின்றது. நான் எனது பொருட்களை எடுத்து செல்லலாம் என்று அவர்களை கேட்பதற்குள் அவர்களாவே அதை எடுத்து துணியில்  துடைத்து கொடுத்தார்கள். “கவர் தரவா தம்பி”, என்று கேட்டார்கள், “ இருந்தா கொடுங்க,” என்று நான் சொன்னேன்.

ஒரு கவர் கிடைத்தது. அதில் எனது செல்போன், லேப்டாப்களை  எடுத்து வைத்து கொண்டு,” ரொம்ப தேங்க்ஸ் கா” என்று சென்றேன். மழையில் நான் சிரம படும்போது உதவிய அந்த அக்காவிற்கு மனதில் இன்னும் ஒரு முறை நன்றி கூறினேன்.

ஒரு இரண்டு மணி நேர மழை எனக்கு அனுதாபம், கோவம், மன அழுத்தம், நெகிழ்ச்சி என அனைத்தையும் ஒரே நாளில் வாரி இறைத்து விட்டு சென்றது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close