/indian-express-tamil/media/media_files/2025/08/21/orange-shark-2025-08-21-19-19-12.jpg)
அரிதிலும் அரிதான ஆரஞ்ச் நிற ஷார்க்... 'சான்திசம்' குறைபாடு என விஞ்ஞானிகள் விளக்கம்
கோஸ்டாரிகா கடற்கரையில், ஆரஞ்சு நிறத்தில் உள்ள அரிய வகை நர்சு சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு, கடல்வாழ் உயிரினங்களின் நிறமிகள் குறித்த ஆராய்ச்சியில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டார்டுயூகெரோ தேசிய பூங்கா அருகே, 37 மீட்டர் ஆழத்தில் மீன்பிடி நடவடிக்கையின்போது இந்த 6 அடி நீள சுறா பிடிபட்டது. பொதுவாக பழுப்பு நிறத்தில் இருக்கும் நர்சு சுறாக்கள், கடல் தளத்தில் தங்கள் நிறத்தைப் பயன்படுத்தி மறைந்துகொள்ளும். ஆனால், இந்த சுறாவின் பிரகாசமான ஆரஞ்சு நிறம், அதை சுற்றிய சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிந்தது. ரியோ கிராண்டே ஃபெடரல் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, இந்த தனித்துவமான நிறம் 'சான்திசம்' (xanthism) எனப்படும் அரிய நிறமி மாற்றத்தால் ஏற்பட்டது. இது அதிகப்படியான மஞ்சள் அல்லது பொன் நிறத்தை ஏற்படுத்துகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சான்திசம் என்பது, சிவப்பு நிறமி இல்லாததால் ஏற்படும் ஒரு குறைபாடு. இந்த நிலை சுறாக்கள், திருக்கை மீன்கள் மற்றும் ஸ்கேட்கள் போன்ற குருத்தெலும்பு மீன் இனங்களில், அதுவும் கரீபியன் பகுதியில், இதுவரை பதிவு செய்யப்படவில்லை. பொன் ஆரஞ்சு நிறத்துடன், இந்த சுறாவில் 'அல்பிணிசம்' எனப்படும் வெள்ளைக் கண்களும் காணப்பட்டன. இந்த 2 இயற்பியல் குறைபாடுகளும், பொதுவாக அவற்றின் இயற்கையான பழுப்பு நிறம் மூலம் கடல் தளத்தில் மறைந்து வாழும் சுறாக்களுக்குப் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன.
சான்திசம் உள்ள விலங்குகள் வேட்டையாடுபவர்களுக்கு எளிதாகத் தெரிவதால், அவை உயிர்வாழ்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால், இந்த சுறாவின் கண்டுபிடிப்பு, அந்த கோட்பாட்டை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது.
காரணங்கள் மற்றும் ஆராய்ச்சி
இந்த அசாதாரண நிறத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சான்திசம் பொதுவாக மரபணு மாற்றத்தால் ஏற்படும் என்றாலும், உணவு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் இதில் பங்கு வகிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு, அப்பகுதியில் உள்ள நர்சு சுறா இனங்களின் மரபணுப் பன்முகத்தன்மை குறித்து பரந்த அளவில் கேள்விகளை எழுப்பக்கூடும்.
'சான்திசம்' என்பது விலங்குலகில் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இதற்கு முன், சில மீன்கள், ஊர்வன மற்றும் பறவைகளில் காணப்பட்டுள்ளது. உதாரணமாக, மஞ்சள் நிற மீன்கள், பொன் நிற இறகுகள் கொண்ட கிளிகள், மற்றும் சில மஞ்சள் நிற பாம்புகள், பல்லிகளில் இந்த நிலை பதிவாகியுள்ளது. இதற்கு நேர்மாறாக, 'அசான்திசம்' (axanthism) என்பது மஞ்சள் நிறமி இல்லாத நிலையைக் குறிக்கிறது. இந்த முழு ஆய்வும் 'மரைன் பயோடைவர்சிட்டி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.