மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் வியாழக்கிழமை, ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். கோல் தானா மற்றும் சுனாரி விதி போன்ற குஜராத்தி இந்து சடங்குகளுடன் பாரம்பரிய முறையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனந்தின் சகோதரி இஷா மற்றும் அம்பானி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், மாலை ராதிகாவின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களை முறைப்படி அழைத்தனர். அவர்களுக்கு மந்திரங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்து, கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெற தம்பதிகளும் குடும்பத்தினரும் கோயிலுக்குச் சென்றனர். விநாயகர் பூஜையுடன் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கியது.

திருமணத்திற்கு முந்தைய கோல் தானா சடங்கில், வெல்லம் மற்றும் கொத்தமல்லி விதைகள் பரிமாறி கொள்ளப்பட்டன, அதைத் தொடர்ந்து சுனாரி விதி சடங்கு நடந்தது. தொடர்ந்து அம்பானி குடும்பத்தினரின் நடன நிகழ்ச்சி, விருந்தினரைக் கவர்ந்தது. விழா மற்றும் சடங்குகளுக்குப் பிறகு, வாழ்த்துக்களுக்கு மத்தியில் தம்பதியினர் மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்.

ராதிகா தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட லெஹங்காவை அணிந்திருந்தார், ஆனந்த் இந்த நிகழ்விற்காக ஒரு அடர் நீல பாரம்பரிய குர்தாவை அணிந்திருந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்களும் தங்கம் மற்றும் நீல நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர்.

ராதிகா மற்றும் ஆனந்த் இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள். இருவருக்கும் வரும் மாதங்களில் திருமணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனந்த், நீடா மற்றும் முகேஷ் அம்பானியின் மகன், மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குடும்பத்தில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த், தற்போது ரிலையன்ஸ் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார்.
ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தார், இவர் ஷைலா மற்றும் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார். மேலும் என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தின் இயக்குநராக உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“