அதிர்ந்தது ஆந்திரா..3 வயதாகும் சந்திரபாபு நாயுடு பேரனின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 18 கோடி!

சந்திரபாபு நாயுடுதான் மிக அதிக சொத்து வைத்திருக்கும் இந்திய முதல்வர்

ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பேரனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சந்திரபாபு நாயுடு பேரன்:

நம்ம ஊர்களில் பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது  யூடியூப்பில் 2 நிமிடம் அல்லது 5 நிமிடம் ஒளிப்பரப்பாகும் வீடியோ மூலமே பலரும் தெரிந்து கொள்வார்கள். அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால்,  கலர்கலரான புகைப்படங்கள், நிஜம் போலவே பேசும் பின்னணி குரல்கள் மூலம் இதுப்போன்ற வீடியோக்கள் எப்போதுமே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துவிடும்.  இதுப்போன்ற வதந்திகளுக்கு எல்லாம் இடம் கொடுக்காமல் கடந்த 8 வருடமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொத்து விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், நேற்றைய தினம்  சந்திர பாபுநாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது மகனும், அமைச்சருமான நரா லோகேஷ் விஜயவாடாவில் இந்த ஆவணங்களை வெளியிட்டார்.

இந்த விவரத்தை  கேட்டு  பலரும் அதிர்ந்தது சந்திரபாபு நாயுடு பேரன் , நரா தேவனேஷின் சொத்து மதிப்பு தான். 3 வயதாகும்  தேவனேஷின் பெயரில் மட்டுமெ ரூ.18.71 கோடி சொத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 வயது பேரனான தேவனேஷ் பெயரில், சந்திரபாபுநாயுடுவை விட ரூ.15 கோடி அதிகமாக சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினருக்கு ரூ.81.83 கோடி சொத்து இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.12.55 கோடி அதிகமாகும், கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.69.28 கோடியாக இருந்தது.

சந்திரபாபு நாயுடுவின் மகனான நர லோகேஷின் சொத்து மதிப்பு, 15.21 கோடி ரூபாயிலிருந்து, 21.40 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல சந்திரபாபு நாயுடுவின் பேரனான தேவான்ஷின் பெயரில் இருந்த 11.54 கோடி ரூபாய் சொத்துகளின் மதிப்பு 18.71 கோடி ரூபாயாக மாறியுள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், ‘சந்திரபாபு நாயுடுதான் மிக அதிக சொத்து வைத்திருக்கும் இந்திய முதல்வர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close