AP CM N Chandrababu Naidu: முந்தைய ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு, திருப்பதி லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எழுப்பியுள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் புதன்கிழமை (செப்.18) முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும்.
திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்’, என்று தெரிவித்தார்.
திருப்பதி திருமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், புனிதமான கோவில் பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு மீது சந்திரபாபு எழுப்பியுள்ள குற்றச்சாட்டு, ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சந்திரபாபு முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது மட்டுமின்றி கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“