Anita Pushpavanam Kuppusamy Home Kitchen Tour Tamil News : அனிதா குப்புசாமி தனிப்பட்ட வகையில் நடத்தி வரும் யூடியூப் சேனலில், சமையல், அழகுக் குறிப்புக்கள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் தன்னுடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட சமையலறையைச் சுற்றிக்காட்டியபடி வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அதில், அவர் உபயோகப்படுத்தும் நவீனப் பொருள்களும் அடங்கும்.
“முன்பு இருந்த சமையலறை எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் சமையல் செய்வதற்கு ஏதுவாக இருந்தாலும், என் கணவருக்கு அவ்வப்போது புதுமையை புகுத்துவது மிகவும் பிடிக்கும். அதனால் அவருடைய ஐடியாவில் உருவாகியதுதான் இந்த புதிய சமையலறை. 100 சதுர அடிதான். ஆனால், முழுக்க முழுக்க மேம்பட்ட நவீன வேலைப்பாடுகள் நிறைந்தது.

முன்பு பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் நிறைத்து வைத்திருக்கும் டப்பாக்கள் வைப்பதற்கு போதுமான அளவு வசதிகள் இல்லை. அதேபோல ஒரு பொருளை எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், இப்போது அப்படியல்ல. என் கணவர் முற்றிலும் புதிய செட்-அப்பை உருவாகிவிட்டார். இந்த சமையலறையை வடிவமைத்தது என் கணவர்தான். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்.
முன்பு ‘ட’ வடிவத்தில் சமையலறை இருந்தது. அதனால், பொருள்களை எல்லாம் ஒரே பக்கமாக வைத்திருப்பதுபோல் இருக்கும். ஆனால், இப்போது ‘ப’ வடிவத்தில் அமைத்திருக்கிறோம். அதனால், ஏராளமான பொருள்களைத் தாராளமாகவே வைக்க முடிகிறது.

ஒருபக்கத்தில் க்ளாஸ் கோப்பைகள் மற்றும் எளிதில் உடையக்கூடிய பொருள்களை வைப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் ஷெல்ஃப். க்ளாஸ் ஜாரில் சேமிக்கப்பட்ட ஊறுகாய் உள்ளிட்டவை வைப்பதற்காகவே இந்த இடம்.
அதற்கு கீழே கிரைண்டர், மைக்ரோவேவ் ஓவன், ஃப்ரையர், ஜூஸர், ஸ்டீமர், டோஸ்ட்டர், ரைஸ் குக்கர், சாப்பர், உள்ளிட்டவற்றை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறேன். உபயோகப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் வகையில் இவை இருக்கின்றன. ஆங்காங்கே சமையலறையை அழகுபடுத்துவதற்காக ஷோகேஸ் பொம்மைகளும் உண்டு.
முன்பு உபயோகப்படுத்திக்கொண்டிருந்த பழைய ஸ்டவ் எனக்கு ஓகேதான். ஆனால், என் கணவர்தான் இருப்பதிலேயே மேம்பட்ட ஸ்டவ் பயன்படுத்தலாம் என்று கூறி, இந்த 5 பர்னர் அடுப்பை வாங்கினார். மேம்படுத்தப்பட்ட சிம்னி இதில் உள்ளது. எண்ணெய்யை உரிந்து தனியே எடுத்துக்கொள்ளும் அம்சமும் இதில் இருக்கிறது.
அடுத்தபடியாக ஃபாயில் பேப்பர், கைதுடைக்கும் துண்டு உள்ளிட்டவை ஒருபக்கத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் சமையல் மட்டும்தான் நான். இந்தக் கிச்சன் மற்றும் இங்கிருக்கும் பாத்திரங்களும் சாதனங்களும் என் கணவருடைய உழைப்புதான்”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil