Anitha kuppusamy shares home remedies for pregnancy women
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.
Advertisment
குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இப்போது கர்ப்பிணி பெண்களுக்கான சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகளை அனிதா குப்புசாமி தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் அனிதா பேசியதாவது; இந்த வீடியோல கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகிற தலை சுற்றல், சோர்வு, வாந்தி, மயக்கம் போக என்ன செய்யனும், அதுக்கான வீட்டுக் குறிப்புகளை பத்திதான் பாக்க போறோம்.
திருமணமான பெண்கள் எடுக்கும் வாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுது. ஏன்னா, கர்ப்பத்தின் அறிகுறியா இது பார்க்கப்படுது. ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றிருக்கும் போது இந்த வாந்தி வருதானா? அப்படி கிடையாது. சில பெண்களுக்கு கருவுற்றிருக்கும் போது அது சாதரண நாட்களாகவே கழிகிறது. ஆனா நிறைய பெண்கள் வாந்தி எடுத்து, எடுத்து ரொம்ப கஷ்டப்படுவாங்க.
சோறு பொங்குற வாசனை கூட இவங்களுக்கு ஒத்து போகாது. தலை சுத்தல், வாந்தி, மயக்கம் வர்ற மாதிரி இருக்கும். தண்ணி குடிச்சாலும் வாமிட் பண்ணிருவாங்க. எதுவுமே வயித்துல தங்காது. இதுக்கு எல்லாமே ஹார்மோன் மாற்றங்கள் தான் காரணம்.
பெரும்பாலான பெண்களுக்கு 3 மாதம் வரை வாந்தி, மயக்கம் இருக்கும். ஆனா ஒரு சில பெண்களுக்கு குழந்தை வெளியே வர்ற வரைக்கும் மசக்கை இருந்துட்டே இருக்கும். ஆனால் கருவுற்றிறு இருக்கும்போது இந்த வாந்தி மயக்கம், மசக்கை எல்லாம் மட்டுப்படுத்த முடியும்.
கர்ப்பிணி பெண்கள் காலையில எழுந்த உடனே எலுமிச்சை சாறு பிழிந்து, அதுல கொஞ்சம் தேன் கலந்து குடிச்சா அன்னைக்கு வாந்தி வர்றது கொஞ்சம் தவிர்க்கலாம். எப்படியும் வாமிட் வரும், ஆனா தண்ணி குடிச்சா கூட எடுக்குற அளவுக்கு வராது. பொதுவா மசக்கையா இருக்கிற நேரத்துல ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க.
எலுமிச்சை சாறும், புதினா சாறுடன் உப்பு கலந்த தண்ணீரை குடிக்கலாம். வெறும் புதினா சாறும் குடிக்கலாம். புதினா இலைகளை வாயில போட்டு மெல்லும் போது மசக்கை கம்மி ஆகும். சீரகத் தண்ணீர் குடிக்கலாம். சீரகமும், இஞ்சியும் தட்டிப் போட்டு, அந்த தண்ணிய கொதிக்க வச்சு குடிக்கலாம். இஞ்சிய முகந்து பார்த்தாகூட மசக்கை கம்மி ஆகும்.
எலுமிச்சை பழத்தை ரெண்டா நறுக்கி, அதை கம்மி தீயில அடுப்புல வச்சு சுடுங்க. தீ அதிகமா வைக்க கூடாது. பிறகு எலுமிச்சை பழம் மேல லேசா உப்பு தடவி, வாமிட் வரும்போது அந்த சாறு லேசா எடுத்து நாக்குல வைங்க. ஒருவேளை எலுமிச்சை பழம் சாப்பிட பிடிக்காதவங்க, அதை பக்கத்துலேயா வச்சுட்டு, வாமிட் வரும்போது எடுத்து முகர்ந்து பார்க்கலாம்.
அதேபோல கருவுற்றிற காலக்கட்டத்துல ஒருசில பெண்களுக்கு அலர்ஜி ஏற்படும். அந்த நேரத்துல புளியோதரை, எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், மாங்காய் சாதம் சாப்பிடலாம்.
கர்ப்பமா இருக்கும் போது நம்ம வாய் ருசி மட்டும் பாக்கக் கூடாது, வயித்துல இருக்கிற குழந்தைக்கு எது ஆரோக்கியம் பாத்து சாப்பிடனும். அதிகமான காரம், அதிகமான இனிப்பு சாப்பிடக்கூடாது. இதெல்லாம் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
இரவு நேரம் கண்டிப்பா ஹெவியான சாப்பாடு எடுத்துக்கவே கூடாது. தூங்கிறதுக்கு முன்னாடி சாப்பிடக்கூடாது. அது அஜீரண கோளாறை ஏற்படுத்தும். நைட் சாப்பாடு 7 மணிக்கே சாப்பிடுங்க. அப்படி இல்லனா அது நெஞ்சுல இருந்துட்டு நிறைய ஒவ்வாமை ஏற்படுத்தும். பொதுவா கர்ப்பிணி பெண்களுக்கு நீர்ச்சத்து அதிகமா இருக்கணும். அதனால் அடிக்கடி வெதுவெதுப்பான தண்ணீரை குடிச்சுட்டே இருங்க. இப்படி பல குறிப்புகளை அனிதா குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“