/indian-express-tamil/media/media_files/2025/05/27/VsbeW2FgP3imIfK6l33h.jpg)
தேங்காய் எண்ணெய்யில் இதை சேர்த்து தடவுங்க… ஆயுசுக்கும் பாத எரிச்சல் இருக்காது; டாக்டர் ராஜலெட்சுமி
இரவு தூங்கச் செல்லும்போது பாதங்களில் ஏற்படும் எரிச்சல் பலருக்கும் பொதுவான பிரச்னையாக உள்ளது. பகலில் எந்தப் பிரச்சனையும் இல்லாத நிலையில், இரவு உறங்கும்போது மட்டும் பாதங்கள் தீப்பிடித்து எரிவது போன்ற உணர்வு சிலருக்கு ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது, என்ன காரணம், வீட்டிலேயே எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து மருத்துவர் ராஜலெட்சுமி ஏ.எஸ்.எம். இன்போ என்ற யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
கால் எரிச்சலுக்கான முக்கிய காரணங்கள்:
பாத எரிச்சலுக்கு சர்க்கரை நோய் மட்டுமே காரணம் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் எரிச்சல் ஏற்படலாம். பாதங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லாதது அல்லது நரம்புகளில் ஏற்படும் பிரச்னைகள், அங்குள்ள திசுக்களுக்குப் போதுமான சத்துக்கள் கிடைக்காதபோது இந்த எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது என்கிறார் மருத்துவர் ராஜலெட்சுமி.
முதுகுத்தண்டுவடப் பிரச்சனைகள்: L4, L5, S1 போன்ற கீழ் முதுகுத்தண்டுவடப் பகுதிகளில் உள்ள டிஸ்க் விலகல் அல்லது அங்கிருந்து வரும் நரம்புகள் நசுக்கப்படும்போது (சயாட்டிகா நரம்பு பாதிப்பு) பாதங்களில் எரிச்சல் ஏற்படும். இது ஆரம்ப கட்டத்தில் இரவு நேரங்களில் மட்டுமே காணப்படும். பகலில் வேலை செய்யும் போது இந்த எரிச்சல் அவ்வளவாகத் தெரியாது.
சர்க்கரை நோய் (டயாபெடிக் நியூரோபதி): இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாதபோது, அது நரம்புகளைப் பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் ஏற்படும்.
கணுக்கால் பகுதியில் நரம்பு நசுங்குதல் (Tarsal Tunnel Syndrome): கணுக்கால் பகுதியில் உள்ள திபியல் நரம்பு (Tibial Nerve) நசுக்கப்படும்போதும் பாத எரிச்சல் ஏற்படலாம். இடுப்பு வலி இல்லாமல் கணுக்கால் மற்றும் பாதத்தின் மேல் புறத்தில் வலி இருந்து, பாதத்தின் முன்புறத்தில் எரிச்சல் இருந்தால் இது காரணமாக இருக்கலாம்.
சரியான காலணி அணியாதது: இறுக்கமான செருப்புகள் அல்லது ஷூக்களை அணிவது இரத்த ஓட்டத்தைத் தடுத்து பாத எரிச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் கால் ஆணி (கார்ன்) போன்ற பிரச்னைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் ராஜலெட்சுமி.
வீட்டு வைத்தியங்கள்:
பாத எரிச்சல் இருந்தால், முதலில் அதன் மூல காரணத்தைக் கண்டறிந்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். இருப்பினும், வீட்டில் இருந்தபடியே சில எளிய முறைகளைப் பின்பற்றி உடனடி நிவாரணம் பெறலாம். கால் எரிச்சலுக்கு உடனடி நிவாரணமாக, குளிர்ந்த நீரில் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்திருப்பது உதவும். ஐஸ் நீர் இல்லாமல், சாதாரண மிதமான குளிர்ச்சியான நீர் போதுமானது. அதன் பிறகு, எப்சம் உப்பு கலந்த நீரில் 10 நிமிடங்கள் பாதங்களை ஊறவைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்சம் உப்பு, உடலில் உள்ள எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை சரிசெய்து, தோல் மற்றும் திசுக்களில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்தி, வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.
கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்துவது கால் எரிச்சலை குறைக்கும். இதற்கு, 100 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஆமணக்கு எண்ணெயை இரவில் பயன்படுத்த வேண்டாம். இந்த எண்ணெயில் ஒரு ஸ்பூன் (5 முதல் 10 கிராம்) கருஞ்சீரக விதைகளைச் சேர்த்து, விதைகள் மொறுமொறுப்பாகும் வரை நன்கு சூடாக்கவும். பின்னர் எண்ணெயை வடிகட்டி சேமித்து வைத்துக் கொள்ளவும்.
இந்த கருஞ்சீரக எண்ணெயை ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் உங்கள் பாதங்களில் தடவவும். கருஞ்சீரகம் பொதுவாக உட்கொள்ளும் போது உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்றாலும், வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது அது குளிர்ச்சியான விளைவைக் கொடுக்கும் என்பது ஆச்சரியமான உண்மை. இந்த எண்ணெய் பாதங்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, எரிச்சல் உணர்வைக் குறைப்பதுடன், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும் என்கிறார் மருத்துவர் ராஜலெட்சுமி.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.