மதுரையின் சுற்றுலாத் தளங்களில் முக்கியமான ஒன்றான நாயக்கர் மஹாலை 1 வாரம் கட்டணம் ஏதுமின்றி சுற்றிபார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மதுரை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி கோவில்தான். இது தவிர மதுரையில் எத்தனையோ சிறப்பு வாய்ந்த வரலாற்று இடங்கள் கட்டிடங்கள் உள்ளன. அதில் முக்கியமானது திருமலை நாயக்கர் மகால். கி.பி. 1636-ம் ஆண்டு திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் இன்னமும் அதன் கம்பீரம் குறையாமல் மதுரையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
இந்த மஹாலில் உள்ள பிரம்மாண்ட தூண்களைக் காண்பதற்காக இங்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த மஹாலில் நுழைவு கட்டணமாக 20 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகின்றது. கட்டிட கலைக்கு சான்றாக இந்த மகாலில் உள்ள தூண்களும் வளைவு மாடங்களும் உள்ளன. அந்த காலத்தில் எந்த நவீன கட்டிட பொறியியல் எந்திரங்களும் இல்லாத நிலையில் இவ்வளவு அழகிய கட்டிடம் கட்ட முடியுமா? என்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த மகாலில் எண்ணற்ற திரைப்பட காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், உலக மரபு வார விழாவை முன்னிட்டு மன்னர் திருமலை நாயக்கர் மகாலை பொதுமக்கள் சுற்றி பார்க்க ஒரு வாரத்திற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (நவ. 19) முதல் 25ம் தேதி வரை பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக மகாலை சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என பலரும் கண்டு ரசித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“