சரவணக்குமார்
செல்லுலாய்டு கனவோடு சென்னை மண்ணை மிதிக்கும் இளசுகளின் கூட்டம் முன்பைக்காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளது. ஒரு படத்தில் தலைகாட்டி ஓவர் நைட்டில் உச்சிக்கு போய்விடலாம் என்கிற தப்புக்கணக்கோடு தங்களின் வாழ்க்கையை பலிகொடுத்தவர்கள் லட்சங்களின் இருக்கிறார்கள். இன்றைக்கு சினிமாவில் மின்னும் நட்சத்திரங்கள், ஒரு நாளில் மின்னிவிடவில்லை. அவர்களின் கடுமையான உழைப்பும், அதிர்ஷ்டமும் கைகொடுத்ததால் மட்டுமே உச்சத்தில் ஜொலிக்கிறார்கள்.
உழைப்பு இருப்பவர்கள் அனைவருமே, அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்துவிடுவதில்லை. அவரை உயரே தூக்கிவிட கிரகங்களே உதவுகின்றன. இதைத்தான் நாம் அதிர்ஷ்டம் என்கிறோம்.
ஒருவரது ஜாதகத்தில் சினிமா துறையில் புகழ் பெறுவதற்கான கிரக அமைப்புகள் இருந்தால் மட்டும் அவர் புகழ் அடைந்துவிடுவாரா?
நிச்சயமாக இல்லை. சம்மந்தப்பட்ட கிரகங்களின் தசா புக்திகள் அவரது ஆயுள் முடிவதற்குள் நடைபெற வேண்டும். அந்த சமயத்தில் மட்டுமே குறிப்பிட்ட யோகம் அவருக்கு கிடைக்கும்.
சரி… இதைப்பற்றி சற்றே விரிவாக காண்போம்.
கலைத்துறையில் காலடி எடுத்துவைக்க திருவாளர் சுக்கிரனின் கடைக்கண் பார்வை கண்டிப்பாக வேண்டும். கனவுத்தொழிற்சாலையை கைக்குள் வைத்திருப்பவர் இவரே.
பொதுவாக லக்கினம், ராசியோடு சுக்கிரன் சம்மந்தப்பட்டிருக்கும் ஜாதகர் கலையான முக அம்சத்தை பெற்றிருப்பார். ஒரு வேளை அழகில் குறைந்திருந்தாலும், தன்னுடைய மேக்கப் மூலம் அதை சரி செய்துவிடுவார். ஆடை ஆபரணங்களின் மீது அலாதிப்பிரியம் இவர்களுக்கு இருக்கும். ‘நீ ரொம்ப அழகா இருக்கே’ என மற்றவர்கள் சொல்லுவதை விரும்பி ரசிப்பார். சினிமா மோகம் இவர்களுக்குள் வாலை சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும். சுக்கிரன் பலம் பொருந்தியவர்களுக்கு, அந்த மோகம் விஸ்வரூபம் எடுத்து ஆடும்பொழுதே, ரயிலையோ பஸ்ஸையோ பிடித்து பட்டணம் வரும் விஷயமெல்லாம் நடக்கும்.
சுக்கிரனின் பலத்தை பொறுத்தும், கிரக சேர்க்கைகளின் அடிப்படையிலுமே பக்கம் பக்கமாய் வசனம் பேசுவதும், பத்தோடு ஒன்று பதினொன்றாக நிற்பதும் அமையும்.
பத்தாமிடமாகிய தொழில் ஸ்தானம், அந்த வீட்டின் அதிபதி ஆகியோருடன் சுக்கிரன் சம்மந்தப்படுவது கலைத்தொழில் ஈடுபட வைக்கும்.
ஜெனன கால ஜாதகத்தில் புதனும், சுக்கிரனும் இணைந்திருப்பதும், சமசப்தம பார்வையில் இருப்பதும் கேமரா முன் நிறுத்துவதற்கான அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்கள், நிச்சயம் ஹீரோ அல்லது ஹீரோயின் என்றெல்லாம் கூறமுடியாது. இரு கிரகங்களும் இருக்கும் இடத்தை பொறுத்தும், மற்ற கிரகங்களின் இணைவு மற்றும் பார்வை பலத்தின் அடிப்படையிலும் கலைத்துறையில் அவருக்கான இடம் நிர்ணயிக்கப்படும்.
சுக்கிரன் புதனின் வீடுகளாகிய மிதுனத்திலும், கன்னியிலும் இருப்பதும் இத்துறையில் ஈடுபடும் அமைப்பாகும்.
ராகு, சுக்கிரன் இணைவும் மிகச்சிறந்த கலைப் பயணத்திற்கு பாதை போட்டுக்கொடுக்கும்.
பத்தாமிட சுக்கிரன் ஜாதகரை உச்சத்தில் உட்கார வைத்துவிடுவார். சினிமா சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் கண்டிப்பாக அந்நபர் பிரகாசமடைவார் என்பது நிச்சயம். இதன் மூலம் புகழ், செல்வாக்கு, அந்தஸ்து என பிரபலமானவராக மாறிவிடும் யோகம் கிட்டும்.
மூன்றாமிடம் பலம் பெற்று சந்திரன், சுக்கிரன், புதன் அவ்வீட்டிற்கு சம்பந்தப்படுவது இசைத்துறையில் ஈடுபடும் வாய்ப்பை தரும். சினிமாவில் பிரபல பாடகராகும் வாய்ப்பை இந்த யோகம் வாங்கித்தரும்.
நம் அனைவருக்குமே சினிமா துறை என்றதும் நினைவுக்கு வருவது நாயகன், நாயகி மட்டுமே. மற்றபடி, இந்த அண்ணன் தம்பி, அமெரிக்க மாப்பிள்ளை போன்றவைகள் மறந்தும் மருந்துக்குகூட ஞாபகம் வருவதில்லை. சரி இது போகட்டும், ப்ரொடியூசர், டைரக்டர், இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், காஸ்ட்டியூமர், டான்ஸ் மாஸ்டர், பாடகர் என எத்தனையோ வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இது அனைத்திற்குமே சுக்கிரன் ஜாதகருக்கு சாதகமாக இருக்கவேண்டும். அவருடைய கருணை இருந்தால், மற்ற கிரக அமைப்புகளை பொறுத்து நடிப்பு மட்டுமல்லாமல், மற்ற வகைகளிலும் கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.