கோவை மாநகரில் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து நகரின் பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில், இந்தியாவிலேயே முதன்முறையாக அசோகச் சக்கரத்துடன் கூடிய சிங்கம் சிலை இன்று (12-05-2025) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் இணைந்து புதிய சிலையை திறந்து வைத்தனர்.
மேலும், நமது பாரம்பரிய கலைகளின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக பரதநாட்டியம், கதக்களி உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்ததுடன், தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது.
இந்த சிலை திறப்பு விழாவில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி - பி. ரஹ்மான்