சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்... கறுப்பு என்பது வெறுப்பா?

கறுப்பு பற்றி நாம் சொல்வது உண்மையெனில் ஒரு பெண் தன்னை விட மேலான சாதி (என நம்பப்படுகிற) ஆணைத் தானே தேர்வு செய்ய வேண்டும்?

அபிலாஷ் சந்திரன்

சென்னை:  தருண் விஜய் சர்ச்சையை ஒட்டி சில நண்பர்கள் எழுதியிருந்த விசயம் நாம் எப்படி கறுப்புத் தோல் மீது தாழ்வுணர்வு கொண்டுள்ளோம், அதனாலே சிவப்பான பெண்களை அதிகம் விரும்புகிறோம் என்பது. நாம் எப்போதாவது கறுப்பான பெண்களை பொருட்படுத்தி காதலித்திருக்கிறோமா? கறுப்பான நாயகிகளுக்கு கவனம் கொடுத்திருக்கிறோமா? ஆண்களே தமது கறுப்பு நிறம் குறித்து லஜ்ஜை கொண்டதில்லையா?

ஆனால் நமது பாலியல் தேர்வை நாம் இப்படி எளிமையாக சுருக்க முடியாது என நினைக்கிறேன். பாலியல் தேர்வு இன்னும் சிக்கலானது. கறுப்பை எடுத்துக் கொள்வோம். கறுப்பு ஒரு குறைபட்ட நிலையை சுட்டுகிறது என நம்புகிறோம். சரி. அதனாலே நாம் கறுப்பான பெண்களை விரும்பவில்லை. அதுவும் சரி. இது சரி என்றால் மற்றொரு கேள்வி வருகிறது. ஏன் மேல்சாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களை விரும்புகிறார்கள்? ஏன் அவ்வளவு போராடி, பெற்றோரை, உறவினரை பகைத்து, ரிஸ்க் எடுத்து குறைபட்டவராய்நம்பும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் ஒருவனை ஒரு பெண் காதலிக்கிறாள்? கறுப்பு பற்றி நாம் சொல்வது உண்மையெனில் ஒரு பெண் தன்னை விட மேலான சாதி (என நம்பப்படுகிற) ஆணைத் தானே தேர்வு செய்ய வேண்டும்?

உதாரணத்துக்கு, சிவப்பான ஆண்கள் அதிகமுள்ள ஒரு சாதியை சேர்ந்த ஒரு பெண் ஏன் கறுப்பான மாற்றுசாதி ஆணை தேர்வு செய்ய வேண்டும்? நமது ”கறுப்புதாழ்வானது எனும் லாஜிக்படி அப்பெண் சிவப்பான சொந்த சாதி ஆணைத் தானே காதலிக்க வேண்டும்? எப்படி சொந்த சாதிக்குள் மணக்கிற பெண்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு சாதிக்கு வெளியே காதலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்? ராமதாஸ் போன்றோருக்கு புரியாத புதிரே இதுதான்.

இன்ன உடல் தகுதி தான் பெண்களை ஈர்க்கிறது என குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. இரண்டு சாதியிலும் உயரமான ஆரோக்கியமான புத்திசாலியான ஆண்கள் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விசயம் தான் பாலியல் தேர்வை தீர்மானிக்கிறது. வித்தியாசம்! நாம் தினம் தினம் சந்திக்கிற மனிதர்களில் இருந்தே சற்றே மாறுபட்டவராய், அதேநேரம் நாம் வழக்கமாய் ஏற்கிற குணநலன்களுடன் அவர் இருக்க வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணங்களாய் மனிஷா கொய்ராலா மற்றும் எமி ஜேக்ஸனைச் சொல்லலாம். மனிஷா மங்கோலிய தோற்றம் கொண்ட நேபாளி என்றாலும் இந்திய முக இயல்புகளும் கலந்தவர். முழுமையான மங்கோலியத் தோற்றம் கொண்ட ஒரு பெண்ணுக்கு இங்கு, அவர் என்னதான் பேரழகி என்றாலும், நட்சத்திரமாக வாய்ப்பு அமையாது. எமி ஜேக்ஸனும் அப்படியே இந்தியச் சாயல் கொண்ட வெள்ளைக்காரி.

நாம் பார்த்து ரசிக்கும் நாயகிகள் நாம் வழக்கமாய் பார்க்கும் பெண்களில் இருந்து சற்றே மாறுபட்டவராய் அதேநேரம் முழுக்க மாறுபடாமல் இருக்க ஆசைப்படுகிறோம். கடந்த ஐம்பது வருடத்தில் தமிழ் சினிமாவிலும் இந்திப் படவுலகிலும் கோலோச்சிய நாயகிகளை எடுத்துப் பாருங்கள். படவுலகம் கிட்டத்தட்ட பாராளுமன்றம் மாதிரி பெரும்பாலான மாநிலத்தோருக்கும் பிரதிநிதித்துவம் அளித்துள்ளதை பார்க்கலாம்.

சிவப்பு மட்டுமே ஒரே அளவுகோல் என்றால் ஹேமமாலினி எப்படி இங்கிருந்து அங்கே சென்று இந்தி ரசிகர்களை வென்றார்? வடக்கே இல்லாத சிவப்பான பெண்களா? தமிழில் என்றால் குண்டான பெண்கள், ஒல்லியானவர்கள், மாநிறமானவர்கள், ஆண் தன்மை கொண்ட பஞ்சாபிப் பெண்கள், மொழுமொழுவென்ற மலையாளிப் பெண்கள் என பலரும் கலந்துதான் தோன்றியிருக்கிறார்கள்.

கேரளாவில் கணிசமான பெண்கள் சிவப்பானவர்கள். ஆனால் சமீப காலங்களில் அங்கே வடக்கிந்திய நாயகிகள் அடிக்கடி தோன்றுகிறார்கள். சிவப்புதான் அளவுகோல் என்றால் அதே மாதிரி பெண்கள் உள்ளூரிலே இருக்கிறார்களே? ஏன் வடக்கே இருந்து கொண்டு வர வேண்டும்?

சரி, கறுப்பான பெண்கள் என்றுமே அதிக அளவில் சினிமாவில் கோலோச்சியதில்லையே? இதற்கு காரணம் நம் தாழ்வுணர்வு அல்ல. கறுப்பு நம் பொது நிறம் என்பதே. நாம் எப்போதும் திரையில் வழக்கத்துக்கு மாறான இயல்புகளையே பார்க்க விரும்புகிறோம். கறுப்பானவர்கள் மீது நமக்குள்ள வெறுப்பு அவர்கள் அதிகமாய் நம்மைச் சுற்றி காணப்படுகிறார்கள் என்பதே. ஆனால் இது கறுப்பு மீதான ஒவ்வாமை மட்டுமல்ல. நம்மைச் சுற்றில் இருப்பவரிடம் தொடர்ந்து காணும் எல்லா இயல்புகள் மீதும் நமக்கு ஒவ்வாமை ஆழ்மனதில் உள்ளது.

நாம் நம்மை கடந்து செல்ல ஏங்குறோம். நமது கலைகள், சினிமா, கற்பனை, அறிவு, இறுதியாய் நம் பாலியல் தேர்வு இவ்வாறு நம்மை மீறிச் செல்ல நமக்கு உதவுகின்றன. மேலும் மாற்று சாதிக்குள் / இனத்துக்குள் ஒருவரை துணையாக தேர்ந்தெடுத்தால் உங்கள் வம்சாவளி ஆரோக்கியமாய் அமையும் என அறிவியல் சொல்கிறது. ஆக சங்கர் தன் ரோபோவுக்கு எமி ஜேக்ஸனை தேர்வு செய்திருப்பது வெறுமனே சிவப்புத் தோல் விவகாரம் மட்டும் அல்ல.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close