/indian-express-tamil/media/media_files/2025/05/17/StBdeSvJ5pZr5OzPmlpc.jpg)
ரயில்வே துறையின் புதிய கொள்கையின்படி, ஆட்டோ அப்கிரடேஷன் மூலம் ஏசி பெட்டிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம், ஸ்லீப்பர் (SL) மற்றும் இரண்டாம் வகுப்பு (2S) ஆகியவற்றில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும் முதல் ஒதுக்கீட்டுப் பட்டியலின் (First Chart) போது ஏசி பெட்டிகளுக்கு மாற்றப்படுவார்கள்.
இந்த நடவடிக்கை காரணமாக, சேர் கார் (CC), மூன்றாம் வகுப்பு ஏசி (3A), இரண்டாம் வகுப்பு ஏசி (2A) மற்றும் முதல் வகுப்பு ஏசி (1A) போன்ற ஏசி பெட்டிகளில் கரண்ட் புக்கிங் (CB) எனப்படும் கடைசி நேர முன்பதிவு வசதி கிடைக்க வாய்ப்பில்லை. எனினும், ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு இந்த வசதி தொடர்ந்து இருக்கும்.
முதல் ஒதுக்கீட்டுப் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு ஏதேனும் காலியிடங்கள் இருந்தால், கடைசி நேர முன்பதிவுகளுக்காக கரண்ட் புக்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பொதுவாக ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை அனுமதிக்கப்படும்.
எந்தவொரு ரயிலிலும் கரண்ட் புக்கிங் பிரிவின் கீழ் இடங்கள், அவசர ஒதுக்கீடுகள் மற்றும் பல்வேறு வகையான காத்திருப்புப் பட்டியல்கள் (Waitlists) அனைத்தும் பரிசீலிக்கப்பட்ட பிறகு, முதல் ஒதுக்கீட்டுப் பட்டியலில் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
ரயில்வே துறையானது ஆட்டோ அப்கிரடேஷன் மூலம் ஏசி பெட்டிகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிப்பதால், அப்டேட் செய்யப்பட்ட பிறகும் மிக அரிதாக சில இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே ஏசி பெட்டிகளில் கரண்ட் புக்கிங் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த வியாழக்கிழமை தெற்கு ரயில்வே மற்றும் அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும், ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள இந்த புதிய மாற்றங்கள், ஏசி வகுப்புகளில் உள்ள அனைத்து இருக்கைகளும் அதிகபட்சமாக நிரப்பப்படுவதை உறுதி செய்கிறது. அது மட்டுமல்லாமல், ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முறையே மூன்றாம் வகுப்பு ஏசி அல்லது சேர் காருக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
ஸ்லீப்பரிலிருந்து மூன்றாம் வகுப்பு ஏசிக்கும், மூன்றாம் வகுப்பு ஏசியிலிருந்து இரண்டாம் வகுப்பு ஏசிக்கும் மாற்றப்படும் இந்த ஆட்டோ அப்கிரடேஷன் வசதி 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த வசதி அந்த வகுப்பில் அதிக கட்டணம் செலுத்திய பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, தட்கல் கட்டணம் அல்லது எந்தவிதமான சலுகையும் பெறாமல் முழு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, பெரும்பாலான ஏசி இருக்கைகள் மற்றும் படுக்கைகள் மண்டலம் முழுவதும் முற்றிலும் முன்பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், பயணிகள் குறைவாக இருக்கும் காலங்களில், அதிக ஏசி இருக்கைகள் உள்ள ரயில்களில், ஏசி அல்லாத டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்" என தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.