கோவையில், பெண்களின் ஆரோக்கியத்தை அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவையில், ராவ் மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பெண்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக, கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் பேரணி நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஆர்.எஸ். புரம் பகுதியில் தொடங்கிய இந்த பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை சுமந்து சென்றனர். இந்த பேரணி, மேற்கு பெரியசாமி சாலை, டி.பி. சாலை மற்றும் தடாகம் சாலை வழியாக சென்று ராவ் மருத்துவமனையில் முடிவடைந்தது.
முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவமனை இயக்குநர் ஆஷா ராவ் கலந்து கொண்டு, பெண்களின் மாதவிடாய் மற்றும் ஆரோக்கியம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
செய்தி - பி. ரஹ்மான்