அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சுமார் 11,000 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் பல்வேறு வகை இனிப்புகள் பிரசாதங்களாக அளிக்கப்பட உள்ளன.
மேலும் அயோத்தி ராமராஜ்யத்தின் சிறிதளவு மண் அழகாக பேக்செய்து அளிக்கப்பட உள்ளது. இந்த மண் கோயில் கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட போது எடுக்கப்பட்டது ஆகும்.
இந்த நிலையில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சடங்கு பூஜைகள் நேற்று (ஜன.16) தொடங்கின.
இன்று (ஜன.17) ராமர் சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது. 18ல் ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகளும், 19ல் கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன.
அன்று மாலை, தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறும். 20ம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகளும், மாலையில் புஷ்ப தீபம் நடக்கவுள்ளன. 21ல் காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிஸமும் சடங்குகளும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சித்ரா, அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், கும்பாபிஷேக விழா நடைபெறும்போது, அன்று நண்பகல் 12.20 மணியளவில், ஸ்ரீராமா, ஜெயராமா, ஜெயஜெயராமா என்று ஒவ்வொருவரும் மந்திரம் கூற வேண்டும்.
மாலையில் வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை ஏற்ற வேண்டும். இறைவனின் ஆசிகள் ஒவ்வொருவர் மீதும் பொழியட்டும் என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு சமூக ஊடகத்தில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கெனவே அயோத்தி ராமர் கோயில் வைத்து பிரதமர் மோடி அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது சித்ராவின் இந்த பதிவால், அவரும் அரசியல் பக்கம் சார்ந்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“