உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. கருவறையில் குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து 23-ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணையை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 4.30 மணிக்கு ஸ்ரீநகர் ஆரத்தியும், 6.30 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்களுக்கான தரிசன நேரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நண்பகலில் போக் ஆரத்தியும், மாலை 7.30 மணிக்கு மாலை நேர ஆரத்தியும், 8 மணிக்கு 2-வது போக் ஆரத்தியும் நடைபெறும்.
அதன் பின்னர் இரவு 10 மணிக்கு நடைபெறும் ஷயான் ஆரத்தியுடன் தினசரி பூஜைகள் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“