அஜித்தோ, சூர்யாவோ... யாரா இருந்தாலும் அட்டாக் தான்! - சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை

பப்லு எனும் பெயரை அவ்வப் போது நீங்கள் டிவியிலோ, சினிமாவிலோ அல்லது ரியாலிட்டி ஷோக்களிலோ கேள்விப்பட்டிருப்பீர்கள். மேம்போக்கான சினிமா ரசிகர்களும் பப்லுவை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்வார்களே தவிர, இன்னார் தான் இவர் என்று கூறுவது சிரமம். ஆனால், டிவி சீரியல் பார்ப்பவர்கள் மத்தியில் பப்லு மிகப் பிரபலம்.

பப்லு என்றவுடன் ஏதோ, சின்னப்பையன் என்று நினைத்துவிட வேண்டாம். ஒரு மகனுக்கு தந்தையான பப்லு எனும் ப்ரித்விராஜுக்கு 53 வயதாகிறது. நம்ம விஜய், அஜித்துக்கு எல்லாம் மோஸ்ட் சீனியர் இவர்.

1971லேயே சிறுவனாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பப்லு, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஏகப்பட்ட சினிமாவில் நடித்திருக்கிறார்.

‘அவள் வருவாளா’ படத்தில் தல அஜித்துக்கு எதிராக நடிப்பில் மிரட்டியிருப்பார். 1997ல் வெளியான பெல்லி எனும் திரைப் படத்திற்காக, சிறந்த வில்லனுக்கான நந்தி விருதை பப்லு வென்றிருக்கிறார்.

2011ல் வெளியான பயணம் படத்தில், ‘சந்திரகாந்த்’ எனும் கேரக்டரில் ஒரு சினிமா ஹீரோவாகவே நடித்திருந்த பப்லு, காமெடியில் சாம்ஸுடன் இணைந்து பின்னியிருப்பார்.

கெத்தான ஹீரோ, நிஜ வாழ்க்கையில் பிரச்சனை என்றால் ஜெர்க் ஆகும் பாத்திரம் தான் சந்திரகாந்த். பயத்தை வெளியில் காட்டாமல் கெத்தாகவே பயப்படுவது போல் அபாரமாக நடித்திருப்பார்.

வில்லத்தனம், காமெடி, நடனம் என்று பட்டையைக் கிளப்பினாலும், சினிமாவில் ஒரு பெரிய இடத்தை அவரால் பிடிக்கவே முடியவில்லை.

ஆனால், சினிமா அவருக்கு கொடுக்காத புகழை சீரியல் கொடுத்தது. மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்றவற்றில் பப்லு நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார்.

கடந்த 2007ம் ஆண்டு ‘ஜோடி நம்பர் ஒன்’ 2வது சீசனில் நடுவராக இருந்தார் சிம்பு. நடிகர் பப்லு நடனமாடிய போது சிம்பு அவரை சீண்ட, இருவரும் மேடையிலேயே சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது, ‘எனக்கு நடிக்கத் தெரியாது’ என்று கூறி தேம்பி தேம்பி அழுதார். இது டிஆர்பிக்காக போடப்பட்ட பொய் சண்டை என்று பேசப்பட்டது.

பல ஆண்டுகள் கழித்து இது பொய் சண்டைதான் பேசி வைத்து போடப்பட்ட சண்டைதான் என்று போட்டு உடைத்தார் பப்லு. அதே நேரத்தில் எனது கோபம் நிஜம்… எனது அழுகை நிஜம் என்று பதில் கூறினார் சிம்பு.

சமீபத்தில் தெலுகு யூ-ட்யூப் சானல் ஒன்றிற்கு பேட்டியளித்த பப்லு, ‘ அஜித் ரொம்ப இறங்கி வந்து வேலை பார்ப்பார், கூலானவர், ஸ்டைலானவரும் கூட. ஆனால், ஜீரோ டெடிக்கேசன் உடையவர். அவர் நடிக்க விரும்பவில்லை, அதை கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால், அவர் நல்ல அதிர்ஷ்ட்டசாலி. அவர் கையுக்கே சூப்பர் ஸ்டார் புகழ் வருகிறது. அவருக்கு நடிப்பதை விட பிரியாணி செய்யதான் அதிக ஆர்வம் இருக்கிறது” என்றார்.

சூர்யா குறித்து பேசியவர், “ சூர்யா நல்ல டெடிகேட்டிவ் பெர்சன். ஆனால், தன்னை சுற்றியே அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் பயங்கரமான ஒரு நபர். அவருடைய காலம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்கிறேன்”.

ராதிகா குறித்து பேசுகையில், “ அவருடன் நடிப்பது மிகவும் கொடூரமானது” என்று முடித்துவிட்டார்.

இப்படியாக சர்ச்சைகளை தேடி பாக்கெட்டுகளில் போட்டுக் கொள்பவராகவும் பப்லு வலம் வருகிறார்.

ஆனால், சோகம் என்னவெனில், இவரது மகன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2006ம் ஆண்டு தனது மகன் மற்றும் மனைவியுடன் பெங்களூரு விமான நிலையம் சென்றபோது, அங்கு இவரது மகனை மட்டும் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இச்சம்பவம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஒரு தந்தையாக பப்லுவை இச்சம்பவம் ரொம்பவே பாதித்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close