உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பக்ரீத், நாடு முழுவதும் இன்று விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமியர்கள் இந்த நாளை கொண்டாடுகின்றன.
இஸ்லாமியர்களின் தியாக திருநாளான, இன்று இஸ்லாமியர்கள் குர்பானி கொடுக்கப்படுவதற்கான அவசியம், காரணம்ம் உங்களுக்கு தெரியுமா?
தமிழகம் முழுவதும் மசூதிகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும், சிறப்பு தொழுகைகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த நாளில், ஏழைகளும் இறைச்சி உணவு சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதி, இஸ்லாமியர்கள், இறைச்சி தானம் செய்வது வழக்கம்.தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.
குர்பானி என்றால் என்ன?
ஆடு, மாடுகளை பலி கொடுத்து, மூன்றாக பிரித்து, ஒன்றை, தம் குடும்பத்திற்கும், இரண்டாம் பகுதியை உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதியை, ஏழைகளுக்கு தானம் கொடுப்பர். இது இஸ்லாமியர்களின் வழக்கப்படி குர்பானி எனப்படுகிறது.
ஆரம்பத்தில், ஆடு, மாடுகள் மட்டுமே, குர்பானி கொடுக்கப்பட்டன. சில ஆண்டுகளாக, அரபு நாடுகள் போன்று, ஒட்டகமும் குர்பானி கொடுப்பது, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
ஈகை திருநாள் சிறப்பு:
பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு வருடமும் அரேபிய மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது.இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது.
இந்த புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது அல்லாவிற்கு பலியிடுவதாகும். பெருநாள் தொழுகை நடைப்பெற்ற பின்னர் வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளும் போகையில் ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தாலே அவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்கிறது ஷரிஅத். உற்றார், உறவினர், ஏழைகளை இந்நாளிலே மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்வு அமைந்திருக்கிறது.
பக்ரீத் நாளில்தான், ‘இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக’ என்ற கோட்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. ‘‘குர்பானிக்காக பிராணியை பலி கொடுக்க அறுக்கும்போது, அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொள்ளப் பட்டதாகிறது. எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்.