இன்றைய நவீன உலகில், ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய மன அழுத்தங்களில் ஒன்று, முடி உதிர்ந்து வழுக்கை விழுவது. இது அவர்களின் தன்னம்பிக்கையையும், தனிப்பட்ட ஈர்ப்பையும் வெகுவாகப் பாதிக்கிறது. வேலை, குடும்பம் என அதிகரிக்கும் மன அழுத்தம் காரணமாக, இளம் வயதிலேயே பலர் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
வழுக்கை விழுந்த இடத்தில் முடி இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முடியுமா? அப்படி ஒரு புதுமையான தீர்வுதான் "ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன்" (SMP) என்றழைக்கப்படும் நுட்பம். இது ஒரு அறுவைசிகிச்சை இல்லாத, அழகு சார்ந்த சிகிச்சை முறை. இச்சிகிச்சையில், நுண் ஊசிகள் மூலம் நிறமிகள் (pigment) தலையின் தோலுக்குள் செலுத்தப்பட்டு, அடர்த்தியான முடி இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
பாராஸ் ஹெல்த் மருத்துவமனையின் பிளாஸ்டிக், டெர்மடாலஜி மற்றும் காஸ்மெடிக் சர்ஜரி பிரிவின் தலைவர் டாக்டர். மண்டீப் சிங் அவர்கள், "இந்த நுட்பம், வழுக்கைப் பகுதிகளை மறைத்து, ஒரு இயற்கையான முடி இழையை உருவாக்குகிறது. இதனால், முடி அடர்த்தி குறைவாக உள்ளவர்களுக்கும், அதிக முடி உதிர்வு உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த வழியாகும். மேலும், முடி மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு, அதன் முடிவுகளை இன்னும் மேம்படுத்தவும் இந்த முறை உதவுகிறது" என்கிறார்.
இது டாட்டூ செய்வது போன்றதா?
சிலருக்கு, ஊசிகளைப் பயன்படுத்தி நிறமிகளை தோலில் செலுத்துவது, டாட்டூ போடுவது போன்றது எனத் தோன்றலாம். ஆனால், ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன் மற்றும் டாட்டூ இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை.
ஊசிகள்: ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன் -ல் பயன்படுத்தப்படும் நுண் ஊசிகள் டாட்டூ ஊசிகளை விட மிக மெல்லியதாகவும், துல்லியமாகவும் இருக்கும்.
ஆழம்: பிக்மென்டேஷன், டாட்டூ போடும் ஆழத்தை விட குறைவான ஆழத்தில் செலுத்தப்படுவதால், அது பரவாமல், கூர்மையாகவும், இயற்கையான தோற்றத்துடனும் இருக்கும்.
பிக்மென்டேஷன்: ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன் -ல் பயன்படுத்தப்படும் நிறமிகள், இயற்கையான முடியின் நிறத்தை ஒத்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை காலப்போக்கில் மெதுவாக மங்கிவிடும். டாட்டூ மை போல நிரந்தரமாக இருக்காது.
முடி உதிர்வுக்கு வேறு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?
ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன் என்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்காமல், முடி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை மட்டுமே உருவாக்கும் ஒரு சிகிச்சை. ஆனால், தனிநபரின் தேவைகளைப் பொறுத்து, வேறு பல சிகிச்சை முறைகளும் உள்ளன. டாக்டர். மண்டீப் சிங் பரிந்துரைக்கும் சில சிகிச்சை முறைகள்:
முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplants): வழுக்கையான பகுதிகளில் முடி நுண்ணறைகளை மாற்றுவதன் மூலம் நிரந்தர தீர்வை அளிக்கும்.
பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா தெரபி (PRP Therapy): இது ஒருவரின் இரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும் சிகிச்சை.
மருந்துகள்: மினாக்ஸிடில் மற்றும் ஃபினாஸ்டெரைடு போன்ற மருந்துகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
இந்த நவீன சிகிச்சை முறைகள் மூலம், முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் தன்னம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். உங்கள் உடல்நலனுக்கு ஏற்ற சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க, ஒரு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.