வாழைப் பழத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப் பழத்தை அப்படியே சாப்பிடலாம். இதை பல்வேறு விதமாக ரெசிபி செய்தும் சாப்பிடலாம். இங்கு காரசாரமாக சிக்கன் லாலிபப் போன்று வாழைப் பழத்தை ஃபிரை செய்து மொறு மொறுவென்று சாப்பிடுவது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப் பழம்- 3 பெரியது
கார்ன்பிளார்- 3 ஸ்பூன்
சோடா உப்பு- கால் டீஸ்பூன்
முட்டை- 2
பால்- 50 மில்லி
பிரெட் தூள்- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைப் பழங்களை இரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாழைப்பழ துண்டுகளில்
ஐஸ் கிரீம் குச்சிகளில் சொருகி லாலிபாப் போன்று வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் கார்ன்பிளார் மாவு, சோடா உப்பு மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி சேர்க்கவும். நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் இப்போது பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஐஸ் கிரீம் குச்சிகள் சொருகி வைத்துள்ள வாழைப் பழங்களை இந்த கார்ன்பிளார் மாவுக் கலவையில் மூழ்கி எடுத்து பின்னர் அதை பிரெட் தூள்களில் புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வரிசையாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைப்பழ துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் கொரியன் ஸ்பெஷல் சுவையான பனானா ஃபிரை ரெசிபி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“