பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட ஏழு பாக்டீரிய இனங்கள் அதிகளவில் இருந்தால், எச்.ஐ.வி. நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்த ஆய்வறிக்கை லான்செட் எனப்படும் மருத்துவ இதழின் இணையத்தளத்தில் வெளியானது. அதில், பெண்களின் பிறப்புறுப்பில் இயல்பாகவே இருக்கும் பாக்டீரியாக்களில், குறிப்பிட்ட ஏழு பாக்டீரியாக்களால் எச்.ஐ.வி. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த பாக்டீரியாக்கள் உள்ளன என்பதைப் பொறுத்து எச்.ஐ.வி. அபாயம் கூடலாம் அல்லது குறையலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் பல ஆண்டுகளாக எய்ட்ஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த முடிவு வெளிவந்துள்ளது. எச்.ஐ.வி. நோய்த்தொற்றும் அதன் மூலம் எய்ட்ஸ் நோயும் எவ்வாறு ஏற்படுகின்றன என்பது குறித்த தெளிவான புரிந்துணர்வை இந்த ஆராய்ச்சி ஏற்படுத்தும் எனவும், அதன்மூலம் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியை முன்னெடுக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய 7 பாக்டீரிய இனங்களால், 56 சதவீத பெண்கள் எச்.ஐ.வி. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.