/indian-express-tamil/media/media_files/2025/06/05/OnIlSXt0WmWTGc63ZzhY.jpg)
மன்மதனுக்கு நிகரான அழகு... கடலில் கிடைக்கும் இந்த பொருள் போதும்; டாக்டர் நித்யா
இன்றைய காலத்தில் ஆண், பெண் இருவரும் விரும்பும் விஷயம் பொலிவான சருமம்தான். ஆனால், மாறும் வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் சருமத்தில் பலவிதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. கருபுள்ளிகள், சருமம் கருமையடைதல், நிறமாற்றம், வறட்சி, சுருக்கங்கள் என பட்டியல் நீள்கிறது. இதற்கு சித்த மருத்துவம் எளிய மற்றும் சிறந்த தீர்வுகளை வழங்குகிறது. டாக்டர் நித்யா தனது யூடியூப் சேனலில் வழங்கிய சருமப் பொலிவிற்கான ஆலோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.
சரும ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது உடலில் சரியான அளவு ஈரப்பதம் இருப்பதே. தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியம். சிலருக்கு வறண்ட சருமம், சிலருக்கு எண்ணெய் பசை சருமம், இரண்டும் கலந்த சரும வகையாக இருக்கலாம். வறண்ட சருமத்திற்கு காரணம் உடலில் நீர்ச்சத்து குறைபாடுதான். எனவே, தாகம் எடுக்காவிட்டாலும் சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்த அறிவுறுகிறார் டாக்டர் நித்யா.
தண்ணீரோடு சேர்த்து, பழச்சாறுகளையும் எடுத்துக்கொள்வது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக எலுமிச்சை சாறு, தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களின் சாறுகளை பருகலாம். வாரம் இருமுறையாவது புதினா இலைகளை அரைத்து, அதனுடன் வெள்ளரி மற்றும் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை மிளிரச் செய்யும்.
மேலும், சருமப் பிரச்னைகளுக்கு உடலில் உள்ள சில நோய் நிலைகளும் காரணமாக இருக்கலாம். கல்லீரல் பாதிப்பு, குடல் சுத்தமின்மை, ரத்தத்தில் நச்சு கலந்திருப்பது போன்றவை சருமத்திலும் பிரதிபலிக்கும். எனவே, உள்ளுக்கு எடுக்கும் சில சித்த மருந்துகள் மூலம் கல்லீரலை பலப்படுத்தி, குடலை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும்போது சருமம் தானாகவே பொலிவு பெறும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வைத்தியங்கள்:
பூசணி விதை, வெள்ளரி விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், மங்கு போன்றவை படிப்படியாக குறையும். சங்கு பற்பம்: இது சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்து. கால்சியம் சத்து நிறைந்தது. வீட்டிலேயே சங்கு பற்பம் இருந்தால், அதை ரோஸ் வாட்டர் விட்டு நன்றாக குழைத்து, முகத்தில் உள்ள சின்ன சின்ன புள்ளிகள், மருக்கள், வியர்க்குரு மீது தடவி வர, முகம் பொலிவு பெறும். சங்கு பற்பத்தை பொடியாக வாங்கி, ரோஸ் வாட்டரில் குழைத்து கரும்புள்ளிகள், மங்கு உள்ள இடங்களில் தடவி வர, "மன்மதனுக்கு நிகரான அழகு உண்டாகும்" என சித்த மருத்துவம் கூறுகிறது.
அமிர்த வெண்ணெய்: வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை சிறிதளவு எடுத்து முகத்தில் தினமும் இரவு தூங்கும் முன் தடவி வர, சரும வறட்சி நீங்கி, முகம் பொலிவடையும். வெயிலில் அலைந்து சருமம் கருத்தவர்களுக்கும் இது நல்ல பலனளிக்கும். சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சி அளித்து, கரும்புள்ளிகள், கருவளையங்கள் மற்றும் முகச் சுருக்கங்களைப் போக்க வல்லது. சந்தனாதி தைலத்தை முகத்தில் தடவி வரலாம் அல்லது தினமும் இரவு தூங்கும் முன் தடவி வர, சருமம் பொலிவு பெற்று, இளமையான தோற்றத்தைத் தரும் என்கிறார் டாக்டர் நித்யா.
- நார்ச்சத்து: காய்கறிகள், பழங்கள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து குடலை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
- புரோபயாடிக்ஸ்: தயிர், மோர் போன்ற புரோபயாடிக்ஸ் நிறைந்த உணவுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- கீரைகள்: தினமும் ஏதேனும் ஒரு கீரையை சேர்த்துக்கொள்வது, கழிவுகளை வெளியேற்றி, ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும்.
பாரம்பரிய குளியல் முறை:
நலங்கு மாவு: கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த சோப்புகளுக்கு பதிலாக, நலங்கு மாவு தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது. பல மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த நலங்கு மாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, அரிப்பு, சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளைக் குறைத்து, சருமத்திற்கு நல்ல நிறத்தையும், பொலிவையும் தரும் என்கிறார் டாக்டர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.