கோடை வெயிலால் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளும் ஏற்படுகிறது. மேலும் வெப்பநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு, இரசாயண பயன்பாடுகள் ஆகியவற்றால் கூந்தல் வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படும்.
அதனால் கூந்தல் வறண்டு, பொலிவிழந்து காணப்படுகிறதே என்ற கவலையை விடுங்கள்.
கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியத்தை நீங்கள் உங்கள் சமையலறையிலேயே பெறலாம். வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் கொண்டு கூந்தல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம். இவற்றில் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளதால் கூந்தலை மிருதுவாகும். மேலும் தயிர் மற்றும் வாழைப்பழம் கூந்தலின் நீளத்தையும் அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்கும். எனவே இவற்றை கொண்டு எப்படி ஹேர் மாஸ்க் தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
தேன் – 2 தேக்கரண்டி
தயிர் – 2-3 தேக்கரண்டி
செய்முறை
வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பின் அதில் தேன் மற்றும் தயிர் சேர்த்து கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு பிசைந்துக் கொள்ளவும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் அலசி விடவும்.
இந்த ஹேர் மாஸ்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கூந்தல் உதிர்வு நின்று கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.