/indian-express-tamil/media/media_files/2025/08/22/beer-for-skin-myths-2025-08-22-12-48-52.jpg)
Beer for Skin Myths
நான் தண்ணீ எல்லாம் அடிக்க மாட்டேன், பியர் மட்டும்தான் குடிப்பேன் என்று சொல்வது ஒரு நகைச்சுவையான, ஆனால் ஆபத்தான மனநிலை. “பியரில் பாலும், தேனும் இருப்பதுபோல” சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், உண்மை என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதிலை மிகத் தெளிவாக விளக்குகிறார் டாக்டர். மதுமதி.
பியர்: உண்மையிலேயே பாதுகாப்பானதா?
பியர், பிராந்தி, விஸ்கி, ஒயின் எதுவாக இருந்தாலும், எல்லாவற்றிலுமே இருப்பது ஆல்கஹால்தான். அப்படியானால் பியர் மட்டும் ஏன் உடலுக்கு நல்லது என்று ஒரு கருத்து நிலவுகிறது? மற்ற மதுபானங்களுடன் ஒப்பிடும்போது, பியரில் ஆல்கஹாலின் அளவு சற்றுக் குறைவாக இருக்கும், அவ்வளவுதான். ஆனால், நீங்கள் இரண்டு பியர் அருந்தும்போது, அதில் இருக்கும் ஆல்கஹாலின் அளவும், நீங்கள் ஒரு குவார்ட்டர் மது அருந்தும்போது இருக்கும் ஆல்கஹாலின் அளவும் ஏறத்தாழ ஒன்றுதான்.
நல்லதா, கெட்டதா?
பியர் குடித்தால் உடலுக்கு நல்லது, ஒயின் குடித்தால் தோல் பளபளப்பாக இருக்கும் என்ற ஒரு தவறான புரிதல் சமூகத்தில் பரவியிருக்கிறது. இது முற்றிலும் ஒரு தவறான கருத்து. எந்த வடிவத்தில் ஆல்கஹால் இருந்தாலும், அது நம் உடலுக்குக் கெடுதல்தான்.
உதாரணமாக, ஒரு நபர் தினமும் இரண்டு பியர் அருந்துகிறார் என்றால், அவருக்கு மது அருந்துபவர்களுக்கு வரும் நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன. கல்லீரல் பாதிப்பு, உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகள் இதனால் ஏற்படக்கூடும். ஒயின் குடித்தால் தோல் பளபளக்கும் என்பதும் ஒரு வதந்திதான். ஆல்கஹால் உடலில் உள்ள நீரை வெளியேற்றி, தோலை வறண்டு போகச் செய்யும்.
எனவே, நீங்கள் அருந்தும் மதுபானத்தின் பெயர் எதுவாக இருந்தாலும், அதில் இருக்கும் ஆல்கஹால் உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்து கொள்வது மிக அவசியம். மது அருந்துவதைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான வாழ்வுக்குச் சிறந்த வழி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.