வெந்தயத்தைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதன் கசப்புச் சுவை நம்மில் சிலரை, பொதுவாகக் குழந்தைகளை முகம் சுளிக்கச் செய்யும். வறுத்துப் பயன்படுத்தும்போது இதன் கசப்பு குறையும். உணவின் சுவையும் கூடும். வெந்தயம், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தச்சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது. பசியைத் தூண்டக்கூடியது. நரம்புகளைப் பலப்படுத்தக் கூடியது. சீதபேதி, பைல்ஸ் எனப்படும் மூலநோய், உடல் சூடு, நீர்க்கடுப்பு போன்ற பல பிரச்னைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது.
இரவு நேரத்தில் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
வெந்தயத்தை லேசாக வறுத்து அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு சீரக பொடியையும் சேர்த்து இரவு சாப்பிட்டு முடித்தபிறது ஒரு டிஸ்பூன் அளவுக்கு வெந்நீரில் சேர்த்து இரவில் சாப்பிட்டு படுத்தால், காலையில் மலச்சிக்கல் தீரும் என்கிறார் மருத்துவர் நித்யா.
வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள், ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தினசரி வெந்தயத்தை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் பச்சையாகவோ, அல்லது பொடித்தோ எடுத்துக் கொள்ளலாம். இரவில் ஊறவைத்து காலையில் அந்த நீருடன் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம். அந்த நீரை அருந்துவதால் சளி பிடிக்காது என்கிறார் மருத்துவர் நித்யா.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த விழுதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம் குறைந்து முடி உதிர்வு கட்டுப்படும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். தலைமுடியின் கருமை நிறம் அதிகரிக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி தரும். தலைச்சூடு நீங்கும் என்கிறார் மருத்துவர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.