சத்தான சிறுதானிய உணவுகள்... ரூ.500 முதலீட்டில் பிஸினஸும் செய்யலாம்

சிறுதானியங்களைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

ராஜலட்சுமி சிவலிங்கம்

இப்போது, எங்கே பார்த்தாலும் சிறுதானியம் பற்றித்தான் பேச்சு. எடைக் குறைப்பில் தொடங்கி எல்லாப் பிரச்னைகளுக்கும் சிறுதானிய உணவுகளே சிறந்தவை என்கிற விழிப்புணர்வு எக்கச்சக்கமாகப் பெருகி வருகிறது. சிறுதானியங்களில் சிற்றுண்டி முதல் விசேஷங்களுக்கான விருந்து வரை எல்லாம் சாத்தியம்.

இதனால் என்ன நன்மை?
இவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. குளுட்டன் தன்மை அற்றவை. அமிலத்தன்மை அற்றவை. இவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவற்றில், நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் சீராக வெளியிடுவதால், சர்க்கரை நோய் உண்டாவதை குறைக்கிறது. அதிக அளவு கால்சியம் ராகியில் உள்ளது

மேலும், சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். நிலத்தில் விதையைத் தூவியதிலிருந்து, குறைந்தது 65 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். சிறுதானியங்களை, சரியான முறையில் சேமித்து வைக்கும் பொழுது, அவை இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்களும் கூட கெட்டுப் போகாமல் இருக்கும். சிறுதானியங்களைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

‘சிறுதானியங்களைச் சாப்பிட வேண்டும், ஆனால், அவற்றைத் தயாரிக்க நேரமில்லை என்கிறவர்களுக்கு சிறுதானிய பானங்கள் உகந்தவை’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விதம் விதமான சிறுதானிய பானங்கள் செய்வதில் நிபுணி இவர்.

‘‘சமீபகாலமா நானும் சிறுதானிய உணவுத் தயாரிப்புல தீவிரமா இருக்கேன். என்னதான் ஆரோக்கியமானவைன்னு சொன்னாலும் குழந்தைங்களை சிறுதானிய உணவுக்குப் பழக்கறது கஷ்டம்தான். அதே போல வயசானவங்களுக்கும் திடீர்னு சிறுதானிய ருசியை ஏத்துக்க முடியாம இருக்கலாம். அதை யோசிச்ச போதுதான் சிறுதானியங்கள்ல பானங்கள் பண்ற ஐடியா வந்தது. அதுபடி காலையில எழுந்ததும் காபி, டீக்கு பதிலா கேழ்வரகு காபி, குழந்தைங்களுக்கு காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சி, மத்தவங்களுக்கு கம்பங்கூழ், சாயந்திரத்துக்கு சோள சூப், பார்ட்டி, விசேஷங்களுக்கு தினை பாயசம் அல்லது பனிவரகு பாயசம், குழந்தைங்களுக்கு தினை பாதாம்கீர், ரொம்ப நேரம் பசி தாங்க சிறுதானிய ரவா மால்ட், பாலைத் தவிர்க்க நினைக்கிறவங்களுக்கு சோளப்பால்னு விதம் விதமா முயற்சி பண்ணினேன். வீட்ல குழந்தைங்கள்லேருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்சது. செய்யறதும் சுலபம்… சீக்கிரமாகவும் செய்துடலாம்…’’ என்கிற ஜெயந்தி, சிறுதானிய பானங்கள் தயாரிப்பதை பிசினஸாக செய்ய விரும்புவோர் 500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்க தைரியம் அளிக்கிறார்.

“கேட்டரிங் பண்ணணும்னு ஆசைப்படறவங்களுக்கு பெரிய இடம், நிறைய முதலீடு தேவை. ஆனா, சிறுதானிய பானங்களை பிசினஸா பண்ண வீட்டு வாசல்லயோ, கடை வாசல்லயோ ஒரு டேபிள் போதும். அதிக பாத்திரங்களும் தேவையில்லை. அப்பப்ப தேவைக்கேற்ப உடனடியா தயாரிச்சு விற்க முடியும். சிறுதானிய சாதம், டிபன் வகைகள் பிடிக்காதவங்க கூட, இந்த பானங்களை விரும்பிக் குடிப்பாங்க. வித்தியாசமே தெரியாது. கூழ் வகைகள் ஒரு டம்ளர் 10 ரூபாய்க்கும் பாயசம் 15 ரூபாய்க்கும் விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிறார். ஒரே நாள் பயிற்சியில் 8 விதமான சிறுதானிய பானங்கள், 4 வகையான சிறுதானிய பான மிக்ஸ், சிறுதானிய ரவை மற்றும் மாவு செய்முறைகளைக் கற்றுக்கொள்ளலாம் என்கிறார்.

இவரைத் தொடர்புகொள்ள: 91760 53671

×Close
×Close