Benefits of Murungai Keerai, Murungai Tea Recipe Tamil: அதிகமாகப் பரவிவரும் கொரோனா காலகட்டத்தில், பெரும்பாலானோர் இயற்கை உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடுகின்றனர். அந்த வரிசையில் நிச்சயம் முருங்கை கீரைக்குத் தனி இடம் உண்டு. இதனை மூலிகை கீரை என்றும் சொல்லலாம். முன்பெல்லாம் முருங்கை மரம் இல்லாத வீடுகளைப் பார்ப்பதே அரிது. முருங்கைக்கீரை, காய், பூ, காம்பு, மரப்பட்டை என முருங்கை மரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
ஆரஞ்சு பழங்களை விடவும் முருங்கைக்கீரையில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, வாழைப்பழத்தில் இருப்பதைவிட அதிக பொட்டாசியம், கேரட்டில் இருப்பதைவிட அதிகளவு வைட்டமின் ஏ, பாலேடையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு புரதம், மற்றும் இரும்பு, பாஸ்பரஸ், அமினோ அமிலங்கள் எனப் பல சத்துகளை முருங்கையில் உள்ளன.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கையில் சூப் செய்து சாப்பிட்டிருக்கிறோம் ஆனால், வித்தியாசமான டீ வீட்டிலேயே செய்திருக்கிறீர்களா?
பொதுவாகவே, மருத்துவ குணங்கள் அதிகமுள்ள தாவரங்களைப் பொடியாக்கி, அதைத் தேநீராக்கிக் குடிப்பார்கள். அதேபோல நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கை பொடியை வாங்கி டீ வைத்துக் குடிப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த டீ பொடியைச் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
நீரிழிவு, ஹீமோகுளோபின் குறைபாடு, இதய நோய், உடல் பருமன், மலச்சிக்கல், நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தம் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் இந்த முருங்கை டீ செய்ய அடித்தளமாக இருக்கும் முருங்கை பொடியை எப்படிச் செய்வதென்று பார்க்கலாம்.
Benefits of Murungai Keerai
முருங்கை பொடி செய்யத் தேவையான பொருள்கள்:
முருங்கை இலை - தேவையான அளவு
இஞ்சி - உள்ளங்கை அளவு
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன் (நறுமணத்திற்காக மட்டுமே)
செய்முறை:
முருங்கை இலையைக் கழுவி, நன்கு சுத்தம் செய்து, வெயில் படாத நிழலில் உலர்த்தவேண்டும். நிச்சயம் பழுத்த இலைகள், பூக்கள், காம்புகள் உள்ளிட்டவற்றை நீக்கிவிடவும். இலையை நன்கு உலர்த்திய பிறகு, அதனை மிக்ஸியில் அரைத்துப் பொடித்துச் சலித்துக் கொள்ளவேண்டும். அதேபோல் இஞ்சியை தோல்சீவி சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடியாக அரைத்துக்கொள்ளவும். சலித்த சுத்தமான முருங்கை பொடியுடன் இஞ்சி மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாட்டிலில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
Murungai Keerai Tea
தேநீர் செய்முறை:
ஒரு டம்ப்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் அரைத்துவைத்த முருங்கை இலை தூள் அரை டீஸ்பூன் அளவு சேர்க்கவும். ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து, அதன்பிறகு 2 நிமிடங்கள் கழித்து, வடிகட்டி இனிப்புக்கு பனங்கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம். இந்த டீயை தினமும் ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம். நிச்சயம் இதனைக் காலை நேரங்களில் மட்டுமே குடிக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு, சூடான சாப்பாட்டில், ஒரு டீஸ்பூன் அளவு பொடி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு நெய் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொடுக்கலாம். கசப்பு தெரியாமல் இருப்பதற்குக் கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்துக் கலந்து கொடுக்கலாம். இதனை ரசம் மற்றும் சாம்பாரிலும் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"