/indian-express-tamil/media/media_files/2025/09/17/download-42-2025-09-17-14-15-43.jpg)
நம்முடைய அஞ்சறை அலமாரியில் மறைந்திருக்கும் பல மருத்துவ இயற்கை பொருட்களில் ஒன்றாகும் சோம்பு. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது. தினசரி உணவுப் பழக்கங்களில் சிறிதளவு சோம்பு சேர்க்கப்பட்டாலும், அது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் சக்தி கொண்டது. இவ்வளவு பயனுள்ள சோம்பு செடியை இயற்கையான முறையில், எளிமையாக வீட்டில் எப்படி வளர்க்கலாம் என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம்.
எப்படி வளர்க்க வேண்டும்?
சமையலில் பயன்படுத்தப்படும் சோம்பை வைத்து நாமே சோம்பு செடிகளை வளர்க்க முடியும். முதலில், சம அளவில் செம்மண் மற்றும் கரைத்து வைத்த கோமைய உரத்தை கலந்து ஒரு நல்ல மண்கலவை தயாரிக்க வேண்டும். பின்னர், சோம்பு விதைகளை அந்த மண்கலவையின் மேற்பரப்பில் தூவி, மெதுவாக மண்ணால் மூடி, அதன் மேல் சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். தண்ணீரை மிக அதிகமாக ஊற்றினால், விதைகள் வெளியே வந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், மெதுவாகவும் அளவாகவும் தெளிக்க வேண்டும்.
5 முதல் 10 நாட்கள்
சோம்பு விதைகளை நடவு செய்த பிறகு, சுமார் 5 முதல் 10 நாட்களுக்குள் அது வளரத் தொடங்கும். இது உள்ளூர் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப வேறுபடும். சுமார் 60 நாட்களில் சோம்பு இலைகள் நன்றாக வளர்ந்திருக்கும், அதன் தோற்றம் சிறிய கொத்தமல்லி கீரையைப் போல இருக்கும். சுமார் 100 நாட்களில், செடியில் ஒரு நீண்ட தண்டு உருவாகி, அதன் உச்சியில் அடர்ந்த மஞ்சள் நிற பூக்கள் மலரும்.
150 நாட்கள்
பூவின் அடிப்பகுதியில் சோம்பு உருவாகத் தொடங்கும், மேலும் செடியில் பல கொத்துகளாக சோம்பு காணப்படும். சுமார் 150 நாட்களுக்குப் பிறகு, இந்த சோம்புகள் மெதுவாக காய ஆரம்பிக்கும். ஆனால் அனைத்து கொத்துகளும் ஒரே நேரத்தில் காயாது. சோம்புகளை தனியாக எடுத்து காய வைக்கும் பட்சத்தில் அந்த நறுமணம் குறைவாக இருக்கலாம். எனவே, செடியிலேயே முழுமையாக காய விட்டு பின் அவற்றை சேகரித்து பயன்படுத்தினால் சோம்பின் இயற்கை நறுமணம் மற்றும் சுவை மிகச் சிறப்பாக இருக்கும்.
சோம்பு செடிகள் வளரும் நேரத்தில், அஸ்வினி பூச்சி மற்றும் மாவுப் பூச்சி போன்றவை தாக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற பூச்சி தொற்றுகளை தடுக்கும் வகையில், வாரத்திற்கு மூன்று முறை வேப்பெண்ணெய் கலந்த கரைசலை தெளித்தால், சுமார் இரண்டு வாரங்களில் செடி மீண்டும் நலமடைந்து வளரத் தொடங்கும். இவ்வாறு சில எளிய முறைகளை பின்பற்றி, நீங்கள் வீட்டிலேயே இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் சோம்பு செடிகளை வளர்த்து அதன் பலன்களை அனுபவிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us