Bharathi Kannama Serial Actress Roshni Haripriyan Personals Tamil News : வெளியான நாளிலிருந்து டிஆர்பி-யில் முன்னிலையில் இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக நடித்து, தமிழ் மக்களின் மனதைக் கொள்ளையடித்து இருக்கிறார் ரோஷினி ஹரிப்ரியன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஹீரோயின் இமேஜ் என்றாலே, வெளிர் நிறம்தான். ஆனால், அந்த ஸ்டீரியோடைப்பை சின்னதிரையில் முதல் முதலில் உடைத்தவர் ரோஷினி. மேலும், இவருடைய மீடியா பயணத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

“சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு கல்லூரி முடிக்கும் வரையில் எனக்குள் என் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தது. எந்த உடை அணிந்தாலும் எனக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதாகவே கருதினேன். அதிகம் பேசவும் மாட்டேன். வாய் திறந்து சிரிக்க மாட்டேன். இப்படி என்னைப் பற்றி நானே வெகுநாட்களாகத் தாழ்த்திக்கொண்டிருந்தேன்.

கல்லூரி முடித்தபிறகுதான் எதற்காக நம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம் என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. சுய தொழில் செய்யலாம் என, நானே கைப்பட தயாரிக்கும் காதணிகளை நானே அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன். பலரிடம் என் காதணிகள் பற்றி மட்டுமல்ல என்னைப் பற்றியும் நல்ல ஃபீட்பேக் வந்தது.
பிறகு, பேங்கிங் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்குச் சென்றபிறகு, கண்ணுக்கு மை, விதவிதமான ஹேர்ஸ்டைல் என என்னை நானே பல வழிகளில் மெருகேற்றிக்கொண்டேன். முதல் முறையாக அப்போது என் கண்களுக்கு நான் மிகவும் அழகாகத் தெரிய ஆரம்பித்தேன்.

இதனைத் தொடர்ந்துதான், மேக்-அப், விதவிதமான உடைகள் என பல்வேறு மாற்றங்களைச் செய்தேன். அது என்னுள் தன்னம்பிக்கையை அதிகரித்தது. முக்கியமாகப் பற்கள் காட்டி சிரிக்க ஆரம்பித்தேன்! அதனைத் தொடர்ந்து பலர் என்னிடம் நல்ல கமென்ட்டுகளை கொடுக்கும்போது, நிச்சயம் நிறம் எதற்கும் ஓர் தடையல்ல என்பதை உணர்ந்தேன். எதையும் நாம் பார்க்கும் விதம் மற்றும் அதனை நாம் என்ன செய்து மாற்றப்போகிறோம் என்பதில்தான் உள்ளது.

நம்ம ஊரில் குழந்தை பிறந்ததிலிருந்து திருமணம் வரை ‘கருப்பா’ என்கிற ஒரு ஸ்டேட்மென்ட் இல்லாமல் இருக்காது. அதிலும் திரைத்துறையில் இன்னும் அதிகம். இதனால் பலர் தன்னம்பிக்கையை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால், மாற்றம் நம்மிடமிருந்துதான் ஆரம்பமாகும். கருப்பு குறை அல்ல என்பதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil