Bhogi Pandigai Significance and Rituals: தமிழர் திருநாளின் பொங்கல் பண்டிகைக்கு முன்னோட்டமாக அமைவது போகி பண்டிகை தான். போகி என்று சொன்னாலே பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கூற்று தான் எல்லோருக்கும் மனதில் தோன்றும். இதனால் வீட்டில் இருக்கக் கூடிய பழைய பொருட்களை வீதியில் போட்டு எரிப்பதை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இதனால் மாசுபாடு ஏற்பட்டு அதே பழைய விஷயங்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறது.
ஆனால், நம் முன்னோர்கள் போகி பண்டிகையை வேறு விதமாக கொண்டாடினர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், பொங்கல் பண்டிகை என்றாலே வீடு முழுவதும் சுத்தப்படுத்தும் வழக்கத்தை கடைபிடித்து வந்தோம். குறிப்பாக, வீட்டிற்கு புதிதாக வெள்ளை அடிக்கும் பழக்கமும் நம்மிடையே இருந்து வந்தது. ஆனால், தற்போது நம்முடைய வாழ்க்கை முறை மாற்றத்தால் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறையே மாற்றம் அடைந்து விட்டது.
முன்னர் இருந்த காலத்தில் பழைய பொருட்களை எரித்ததாக கூறுவார்கள் ஆனால், உடைந்து போன கூடை, முறம் போன்ற பொருட்களையே எரித்தனர். அந்த பொருட்கள் எல்லாம் மூங்கிலால் செய்யப்பட்டது. மேலும், முற்றிலும் கிழிந்து போன துணிகள், சாக்குப் பைகள், துடைப்பம் போன்ற பழைய பொருட்களே எரிக்கப்பட்டன.
தற்போது நாம் எரிப்பதை போன்று டயர், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை, முன்னர் இருந்த காலத்தில் நாம் எரிக்கவில்லை. இதனால் தான் காற்று மாசுபாடு ஏற்படாமல் இருந்தது. இன்றைய சூழலில் கொண்டாட்டம் என்ற பெயரில் தேவையில்லாத பொருட்களை எரிக்கிறோமே தவிர அவற்றால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
தற்போது மாசு விளைவிக்காத பொருட்களை நாம் எரிக்க வேண்டும் என்றாலும் அதற்கு நேரம் காலம் இருக்கிறது. அதன்படி, காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து, சுமார் 5:30 மணிக்குள்ளாக இவற்றை எரித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பாக இவற்றை எரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், எரிப்பதற்கு பொருட்கள் மற்றும் வசதி இல்லாதவர்களும் போகியை கொண்டாட வேண்டும் எனக் கருதுவார்கள். அவர்கள் சில வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்காக போகியின் தத்துவத்தை அறிந்து கொள்வது அவசியம். பழையன கழிதல் என்றால் அவை பொருட்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்மிடம் இருக்கும் தீய குணங்களாக கூட இருக்கலாம். அந்த வகையில் அதிகப்படியான கோபம், பகை உணர்வு, பொறாமை போன்றவற்றை இந்த போகியில் இருந்து விட்டுவிடும் பழக்கத்தை ஒரு நபர் கடைபிடிக்கலாம்.
இதேபோல் போகி அன்று வழிபாடு செய்வது முக்கியம். வீட்டைக் காக்கக் கூடிய தெய்வத்தை அழைக்கும் நாளாக போகி கருதப்பட்டது. நமக்கு இஷ்டமான தெய்வம் அல்லது குல தெய்வத்திற்கு போகியன்று மாலை நேரத்தில் படையல் வைக்க வேண்டும். ஒரு இலையில் பச்சரிசியில் பொங்கிய சாதம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும்.
இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி நாம் இந்த ஆண்டு போகி பண்டிகையை கொண்டாடலாம்.