தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்தே விட்டது. நாளை போகி பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' சான்றோர் வாக்கு.
வீட்டைத் தூய்மை செய்து வெள்ளையடித்து தூசுபோக்கி, மாசு நீங்க வீட்டின் வாசலில் கண்ணுப்பீளையும் வேப்பிலையும் சொருகிவைத்து வரபோகும் தைத்திருநாளை வரவேற்கும் நாள் போகி.
பனிக் காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டி இருக்கும் பூச்சிகள், விஷக் கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான் பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர்.
அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக மூலிகைச் செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.
போகிப் பண்டிகை அன்று அதிகாலையில் நிலைப்பொங்கல் வைக்கும் வழக்கம் இன்றும் நமது தென்மாவட்டப் பகுதிகளில் இருக்கிறது.
அன்று, வீட்டின் முன்வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பு ஒன்றைச் சாத்தி நிற்க வைத்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் முதலியன படைத்து தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர்.
இது நம் இல்லத்தில் உறையும் இல்லுறை தெய்வத்தை வணங்குவது என்கிறார்கள்.
நம் இல்லத்தில் தங்கியிருந்து நம் குடும்பத்தைக் காக்கும் தெய்வமே இல்லுறை தெய்வம். பெரும்பாலும் அந்த தெய்வம் நம் முன்னோர்களாகவோ அல்லது குலதெய்வமாகவோ இருக்கும். இந்த வழிபாட்டை வீட்டின் குடும்பத்தலைவியே நடத்துவார்.
ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் போகிப் பண்டிகையை வேறு விதமான புரிதலோடு அணுகுகின்றனர். போகி என்பது தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பது என்பது போன்ற எண்ணம் நகரத்தில் நிலவுகிறது.
தீபாவளி சமயத்தில் வெடிக்காது போன பட்டாசுகளையும், டயர்களையும் வீட்டின் அருகிலேயே போட்டு எரிக்கின்றனர்.
இதிலிருந்து ஜிங்க் ஆக்ஸைட் உட்பட பல்வேறு விதமான நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. அவை சுற்றுச்சூழலை, காற்றை, இயற்கையை மாசுபடுத்துகின்றன. குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகளுக்கு அதிகபட்சக் கெடுதல் நேரிடுகிறது.
உண்மையில் பழைமையான நம் எண்ணங்களை விட்டுவிட்டுப் புதிய நம்பிக்கைகளைச் சூடிக்கொள்வதுதான் போகி. எனவே தவறாமல் இந்த நாளில் அதிகாலையிலேயே நீராடி இறைவழிபாடு செய்து நம் இல்லுறை தெய்வத்தை வழிபடுவோம். நலமும் வளமும் சூழ அனைவருக்கும் போகிப்பண்டிகை நல்வாழ்த்துகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“