Bigg Boss Archana Latest Viral Video Food Diet Tamil News : பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் கன்டென்ட்டுகளை அடுக்கும் பிக் பாஸ் அர்ச்சனா, சமீபத்தில் அனைவர்க்கும் பயனளிக்கும் விதமாக ஆரோக்கிய உணவுகள் பற்றிய காணொளி ஒன்றை தன் யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார். கொரோனா பரவல் காலத்திலிருந்து பெரும்பாலான மக்கள் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் குறைந்துவிட்டது. இந்நிலை ஒருவகையில் நல்லது என்றாலும், வீட்டில் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே ஆரோக்கியம்தானா என்கிற கேள்வி எழாமலில்லை. அதற்கான பதிலை, அர்ச்சனாவின் தங்கையும் ஊட்டச்சத்து நிபுணருமான அனிதாவோடு டிஸ்கஸ் செய்து பதிவேற்றியிருந்தார் அச்சும்மா.
“காலை முதல் மாலை வரை நாம் எல்லோருமே ஓடி ஓடி வேலை செய்வது இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான். ஆனால், அதற்காக நாம் சாப்பிடும் எல்லாமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறதா என்பது கேள்விக்குறிதான். அதை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்” என்றபடி அர்ச்சனா இன்ட்ரோ கொடுக்க, அனிதா அதற்கு பதிலளிக்க ஆரம்பித்தார். இப்படிதான் இவர்களின் இந்த ‘சோறு முக்கியமா சங்கம் முக்கியமா’ காணொளி தொடங்கியது.

அர்ச்சனாவின் மாமனார், மாமியார், கணவர் என அடுத்தடுத்து அனைவரும் கொரோனாவால் பாதிப்படைந்து மீண்டு வந்த நேரத்தில், அவருக்கு மிகப் பெரிய பிரச்சனை உடலில் ஏற்பட்டு, சர்ஜரி வரை நீண்டது. இப்படி இவருடைய 2021-ம் ஆண்டு துயரங்கள் நிறைந்திருந்தாலும், அதிலிருந்து விரைவில் மீண்டு வந்து மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்குக் காரணம் தங்களின் ஆரோக்கிய உணவு முறைதான் என்கின்றனர் அர்ச்சனா மற்றும் அனிதா சகோதரிகள்.
அதிலும் தன் தங்கை அனிதா அதிகம் என்றபடி, ஆரோக்கியமான உணவு என்றால் என்ன என்கிற கேள்வியையும் அனிதாவிடம் முன்வைத்தார் அர்ச்சனா. “உண்ணும் உணவு என்பதைவிட, அந்த உணவில் இந்த எலிமென்ட்டுகள் அனைத்தும் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பது அவசியம். கொழுப்பு உடலில் சேரக்கூடாது என்பதற்காக பல்வேறு வகையான நல்ல உணவு வகைகளைப் பலர் தவிர்ப்பார்கள். ஆனால், நம் ஆரோக்கியமான உடலுக்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம்.

உதாரணத்திற்கு நட்ஸ் வகைகள். அவற்றில் இருக்கும் நல்ல கொழுப்புகள் நிச்சயம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதற்கடுத்து, புரதம், கால்ஷியம், இரும்பு, மினரல்ஸ் ஆகியவை உண்ணும் உணவில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அந்த வரிசையில், புரதம் மற்றும் கால்ஷியம் இணைந்திருக்கும் பால், சீஸ், பனீர், சோயா வகைகள் மற்றும் டேட்ஸ், கீரை போன்ற இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் தவிர்க்காதீர்கள்.
இதை எல்லாவற்றையும்விட உங்கள் ஊரில் என்ன உணவு பின்பற்றப்படுகிறதோ அந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. அதேபோல எந்த உணவுகள் சாப்பிட்டாலும், அதனை அளவோடு உட்கொள்ளவேண்டும். பிடிக்கும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. மேலும், சர்க்கரை, மைதா போன்ற வெள்ளை உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. வெளியில் சாப்பிடவேண்டுமென்றாலும் சாப்பிடலாம். ஆனால், தினமும் வேண்டாம்.
குழந்தைகளுக்குக் காய்கறிகள் அதிலும் நீர் நிறைந்த காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் அதிகம் கொடுக்கலாம். அப்படியே கொடுத்தால் அவர்கள் சாப்பிடுவது கடினம் என்பதால், அதனை சட்னி, சாண்ட்விச் போன்ற வெவ்வேறு வடிவங்களில் செய்து கொடுக்கலாம். அன்போடு சமைத்துப் போட்டால் நிச்சயம் அதனை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்” என்று நம்மிடமும் அவர்களின் அன்பை தூவிவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil