Bigg Boss Losliya about her life Friendship movie Latest News : இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ஆர்மியையே உருவாக்கினார். அந்த ரியாலிட்டி ஷோவில் தன்னுடன் பங்கேற்ற சாகப்போட்டியாளரான கவினுடனான காதல் வதந்தி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டில் தன் தந்தையை சந்தித்த தருணம், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் தன்னுடைய தந்தை மரணமடைந்த செய்தி என லாஸ்லியாவைச் சுற்றி பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களும், கண்ணீர் கதைகளுமே நிறைந்திருந்தன.

என்றாலும், சிறு வயதிலிருந்து ஏராளமான தடைகளை சந்தித்த இவர், தற்போது தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெற்று, வெற்றிப்படிகளைச் செதுக்கிக்கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததுமே இவர் கமிட்டான முதல் திரைப்படம் ‘ப்ரெண்ட்ஷிப்’. ஆக்ஷன் கிங் அர்ஜுன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நகைச்சுவை நடிகர் சதீஷ் எனப் பல பிரபலங்களோடு இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்திற்குச் சமீபத்தில் சென்சார் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து லாஸ்லியா எப்படி இருக்கிறார் என்பதை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

“எனக்கு நடிப்பதில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லை. தமிழ்நாட்டில் ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து வழங்க முடியுமா என்பதற்காகத்தான் இலங்கையிலிருந்து வந்தேன். ஆனால், இங்கு முதலில் எனக்கு சீரியலில், கதாநாயகிக்குத் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்துதான் பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. அதன் பிறகும் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.

என்றாலும், வாய்ப்புகள் வந்தன. என் உறவினர்கள் முதல் நண்பர்கள் வரை என்னிடமும் என் பெற்றோர்களிடமும் ஏன் நான் சென்னை வந்தேன், இங்கு என்ன செய்யப் போகிறேன் என்றுதான் கேட்கிறார்கள். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக, நடிக்கலாம் என்று களத்தில் இறங்கி விட்டேன். இப்போதைக்கு இலங்கை திரும்பும் எண்ணம் இல்லை.

நடிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. பல இடங்களில் நமக்கு சரியாக நடிக்க வரவில்லையோ என்று நினைத்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் நல்லா நடித்திருக்கலாம் என்று தோன்றும். என்றாலும், முன்பைவிட இப்போது கொஞ்சம் நடிக்கக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். அதேபோல, சரியான நேரத்திற்கு வேலைக்குச் செல்வது, லைட்டிங் மற்றும் ஷூட் செய்வதிலிருக்கும் கஷ்டங்கள் உள்ளிட்ட பலவற்றைத் தெரிந்து அதற்கேற்றது போல் என்னை மாற்றிக்கொண்டேன்.

முக்கியமாக, முன்பைவிட இப்பொழுது குறைவாகப் பேசுகிறேன். எப்போதும் லொடலொட எனப் பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால், இப்போது அமைதியாகிவிட்டேன். அந்த மாற்றம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நான் பேசாமல் இருக்கிறேனா?’ என்று எனக்கே சந்தேகம் எழும். காரணம்தான் தெரியவில்லை. மேலும், இப்பொழுதெல்லாம் கொஞ்சம் கூட மிஸ் பண்ணாமல் ஜிம் செல்கிறேன். நமக்கு நாம் எப்படி இருந்தாலும் பிடிக்கும். ஆனால், ஸ்க்ரீனில் பார்க்கும்போது மற்றவர்களுக்கும் நல்லவிதமான தெரியணும். அதனால், இதுபோன்ற சில மாற்றங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil