இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். இவற்றின் நன்மைகள் குறித்து அறிந்திருப்போம். ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு பையோட்டின் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் முடியின் ஆரோக்கியத்திற்கு பையோட்டின் உதவும் எனக் கருதுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முடியின் ஆரோக்கியம் மட்டுமின்றி, நமக்கு தேவையான பல விஷயங்கள் பையோட்டினில் உள்ளது. இதன் முக்கியத்துவம் குறித்து இதில் காணலாம்.
பையோட்டினை வைட்டமின் பி7 என்று அழைப்பார்கள். நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ், ஃபேட்ஸ் ஆகியவை முழுமையாக ஜீரணமாகி அதில் இருந்து போதுமான அளவிற்கு ஆற்றல் கிடைக்க வேண்டுமென்றால் பல வேதியியல் மாற்றங்கள் நடைபெற வேண்டும். இதற்கு பையோட்டின் மிக முக்கிய தேவையாக இருக்கிறது.
பையோட்டின் சரியான அளவு இல்லையென்றால் தலை முடியின் அடர்த்தி குறையும். இதனால் தான் முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு பெரும்பாலும் பையோட்டின் தொடர்பான மருந்துகள் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி அதிக உடல் சோர்வு, தூக்கமின்மை, சரும பிரச்சனைகள் ஆகியவை பையோட்டின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
இவற்றை சரி செய்ய நாம் அன்றாடம் 30 மைக்ரோ கிராம் அளவிற்கு பையோட்டின் எடுத்துக் கொள்ள வேண்டுமென வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, பையோட்டின் சத்துகள் நிறைந்திருக்கும் உணவுகளை நாம் நாள்தோறும் சாப்பிட வேண்டும்.
1 முட்டையின் மஞ்சள் கருவில் 10 மைக்ரோ கிராம் பையோட்டின் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல அசைவ உணவுகளில் பையோட்டின் சத்து காணப்படுகிறது. சைவத்தில் பட்டாணி, பீன்ஸ் ஆகியவை சாப்பிடலாம். இவற்றிலும் பையோட்டின் சத்து உள்ளது. மேலும், ப்ரோக்கோலி, பட்டர் ஃப்ரூட், சூரிய காந்தி விதைகள், பூசணி விதைகள், ஆலிவிதைகள், காளான் போன்றவற்றிலும் பையோட்டின் இருக்கிறது. இவற்றை நம் தேவைக்கேற்ப சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“