ஜூலை மாதம் ஒரு அரிய வானியல் காட்சி நிகழ உள்ளது. பிளட் மூன் (Blood Moon) எனும் அந்த அரிய நிகழ்வு, ஜூலை 27-28ல் வானில் தோன்ற உள்ளது.. இந்த சந்திர கிரகணம் தான் 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டில் ஜனவரி 31ம் தேதி நிகழ்ந்த சூப்பர் பிளட் மூன் நிகழ்வைத் தொடர்ந்து, தற்போது இந்த பிளட் மூன் தோன்ற உள்ளது.
பிளட் மூன் சிறப்பம்சம் என்ன?
ஜூலை மாதம் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் கிட்டத்தட்ட 1 மணி நேரம், 43 நிமிடத்திற்கு நிலைத்திருக்கும் என விண்வெளி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் நிகழ்ந்த சூப்பர் ப்ளூ பிளட் மூனை விட இது 40 நிமிடம் கூடுதலாகும்.
'பிளட் மூன்' எனப்படுவது, சூரிய ஒளி நேரிடையாக நிலவின் மீது படாமல் பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு நிலவின் மேல் விழும். பூமியின் வளிமண்டலத்தால் பிற நிறங்கள் வடிகட்டப்பட்டு அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலவை சென்றடையும் அதனால் நிலவு சிவப்பாக காட்சியளிக்கும். இதுவே ’பிளட் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த சந்திர கிரகணம், பூமியின் நிழலால் நேரடியாக கடந்து செல்லும் வரைக்கும் நீடிக்கும்.
அதே நேரத்தில், அது பூமியில் இருந்து மிக அதிக தொலைவில் இருக்கும். எனவே, பூமியின் நிழலை கடக்க நீண்ட நேரம் எடுக்கும்.
இந்த பிளட் மூன், உலகின் கிழக்கு அரைக்கோளத்தில் மட்டுமே தெரியும். ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் கிரகணம் தோன்றும். வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக்-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளவர்கள் இந்த நிகழ்வைப் பார்க்க முடியாது.
ஜூலை 27-28 அன்று, இந்த மிக நீண்ட கிரகணம் தோன்றும் என கூறப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம், 43 நிமிடங்கள் இது நீடிக்கப்படும்.
ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில், காலை நேரத்தில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் மாலை நேரத்தில் காணலாம். சூரியம் மறையும் நேரம் அல்லது ஜூலை 27 நடுஇரவில் இதனை பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.