உடல் மொழியின் உண்மைகள்

உடல் மொழி கணிப்பு என்பது மிகப் பல அம்சங்களை உள்ளடக்கியது.

By: May 26, 2017, 4:15:46 PM

டி.ஐ. ரவீந்திரன்
எல்லோருக்கும் மற்றவர்களைப் புரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது. அதற்காக, அவரிடமே ‘நீங்கள் எப்படிப்பட்டவர் என்று எல்லா சமயங்களிலும் கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும் உண்மை வருமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அவர்களது உடல் மொழியைப் புரிந்துகொள்வதன் மூலம் ஓரளவுக்கு நாம் எந்த வகையான நபருடன் தொடர்பு கொண்டிருக்கிறோம், அவர் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உடல் மொழி கணிப்பு என்பது மிகப் பல அம்சங்களை உள்ளடக்கியது. அதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
சந்தேகம்: ஒருவர் நீங்கள் சொல்வதைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ சந்தேகப்படுகிறார் என்பதைக் கண்டுபிடிக்கச் சில அடையாளங்கள் உள்ளன. கண்களைச் சுருக்குவது. பக்கவாட்டில் பார்வையை செலுத்துவது. புருவங்களை உயர்த்துவது. கண்களைக் காரணமொன்றித் தேய்த்துக்கொள்வது. தலையைப் பக்கவாட்டில், ‘இல்லை, இருக்காது’ என்பதுபோல அசைப்பது. பலூன் ஊதுகிறாற்போலக் காற்றை வாயில் நிரப்பி வெளிவிடுவது. கண்களை, புருவங்களை, சில சமயம் முகத்தைச் சுருக்குவது. இந்த அடையாளங்களை ஒருவர் தன்னிச்சையாக வெளிப்படுத்தினால் அவர் மனதில் உங்களைப் பற்றிய சந்தேகம் இருக்கிறது என்று அர்த்தம்.
ரகசியத்தன்மை: இறுக்கமான புன்னகை, கைகளை பாக்கெட்டில் நுழைத்துக்கொள்வது. உங்களைப் பார்க்காமல் வேறெங்கோ பார்ப்பது, முகத்தை மூடிக்கொள்வது. கீழே பூமியை அல்லது கால்களைப் பார்த்துக்கொண்டிருப்பது. இவை ரகசியத்தன்மைக்கான அடையாளங்கள்.

தயக்கம்: கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொள்வது. கை விரல்களை மூடிக்கொண்டு முஷ்டியை இறுக்கிக்கொள்வது. ஒற்றைக் காலில் நிற்பது. கால்களில் கோலம் போடுவது. மூக்கைக் கிள்ளுவது. கைகளால் காதுகளை மூடிக்கொள்வது ஆகியவை தயக்கத்தைக் காட்டுபவை.

கள்ளத்தனம் (திருட்டு அல்ல): இலேசாக இறுக மூடிய புன்னகை, ஒரு புருவம் மட்டும் தூக்கியிருத்தல். முகவாய்ப் பகுதி சற்றே பின்னுக்கு இழுத்தபடி இருத்தல். மர்மப் புன்னகை. புருவங்கள் தூக்கியிருத்தல். கைகளைக் கோபுரம்போல வைத்துக் கொள்ளல்.

கர்வம் அல்லது ஆதிக்கம் செலுத்துவதற்கான விருப்பம்: முகவாய் தூக்கியிருத்தல், நெஞ்சு நிமிர்த்தியிருத்தல். தோள்கள் பின்னுக்கு இருத்தல். மிக இறுக்கமான கை குலுக்கல். உட்காரும்போது கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டியிருத்தல். கால்களை பெஞ்ச் அல்லது மேசையின் மீது போடுதல். கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தல். நாற்காலியை ஆட்டிக்கொண்டேயிருத்தல். நிற்கும்போது கைகளை இடுப்பில் வைத்துக்கொள்வது. இந்த அடையாளங்கள் ஒருவரது கர்வத்தை, ஆதிக்கப் போக்கை உணர்த்தக்கூடியவை.

சொந்தம் கொண்டாடுதல் அல்லது உறுதி செய்தல்: மிக இயல்பாக உரிமையுணர்வுடன் உள்ளங்கை முழுவதும் படுகிறாற்போல அல்லது அணைப்பில் கொண்டுவருகிறாற்போல, வலியின்றி அதே சமயம் விட இயலாத பிடியுடன் கைகுலுக்குவது. தோள்களை, இடுப்பை, கழுத்தை அணைத்தாற் போல இருப்பது. அருகே உள்ள சுவரில் கைகளை வைத்துக்கொண்டு அரண் போல இருப்பது. அடுத்தவருக்கான தனியுரிமை இடத்திற்குள் இயல்பாய் வருவது. விரல்களால் முகத்தை வருடுவது, முழு உடலும் தயக்கமின்றி எதிரில் இருக்கும் நபரை நோக்கிய நிலையில் இருப்பது. இத்தகைய நிலைகள் சொந்தம் கொண்டாடும் மனநிலையைக் குறிக்கக்கூடியவை.

பொறாமை: இறுக்கமான உதடுகள். எரிச்சலான முக பாவம். குறுகிய கண்கள். மார்பின் குறுக்கே இறுக்கமாகக் கட்டியிருத்தல். அலட்சிய பாவம். பின் தொடரும் கண்கள். தெரிந்தும் தெரியாமலும் கண்காணிப்பு ஆகியவை பொறாமையின் வெளிப்பாடுகள்.
இப்படிப் பல அடையாளங்கள் இருக்கின்றன. தன்னிச்சையாக, இயல்பாக வெளிப்படும் உடல் மொழியின் மூலம் ஒருவரது மனநிலையை அறிந்துகொள்ள முடியும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Body language facts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X