/indian-express-tamil/media/media_files/2025/07/04/rambutan-xy-2025-07-04-07-14-55.jpg)
திருநெல்வேலியில் ரியாஸ் எனும் 5 வயது சிறுவன் ரம்புட்டான் பழம் சாப்பிட்டு தொண்டையில் அதன் விதை சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Photograph: (Freepik)
திருநெல்வேலியில் ரியாஸ் எனும் 5 வயது சிறுவன் ரம்புட்டான் பழம் சாப்பிட்டு தொண்டையில் அதன் விதை சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போல் தொண்டையில் ஏதேனும் சிக்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரம்புட்டான் பழம் சாப்பிட்டு அதன் விதை தொண்டையில் சிக்கிக் கொண்டதில் மூச்சுத் திணறி சிறுவன் பலியாகி இருப்பது பெரும் சங்க நிகழ்வு.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல். எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரின் தாய் , உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பூரி தொண்டையில் சிக்கி அவர் கண்முன்னே இறந்தார் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன்.
இத்தகைய நிலை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இங்கே ரம்புட்டான் பழமோ? அதன் விதையோ? பூரியோ? தனிப்பட்ட காரணங்கள் அன்று. நாம் உண்ணும் எந்த உணவுப் பொருளும் குறிப்பாக சிறார் சிறுமியிடத்திலும் முதியோர் இடத்திலும் சில நேரங்களில் இளையோர் இடத்திலும் கூட தொண்டையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.
பொதுவாக உணவை வாயிலிட்டு அமைதியாகப் பொறுமையாக உணவைப் பார்த்து ரசித்து உண்ண வேண்டும். வெடுக் வெடுக்கென வேகமாக விழுங்குவதோ, வேறு ஏதேனும் விஷயத்தில் கவனத்தை வைத்துக் கொண்டு உணவை விழுங்குவதோ தவறானது.
முக்கியமாகப் பேசிக் கொண்டே உணவு சாப்பிடுவது மிகவும் ஆபத்து. சோக்கிங் வாய்ப்பை அதிகரிக்கும். சிறார் சிறுமியர் முதியோர்களிடத்தில் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும். இதனால் தொண்டைப்பகுதி அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவ்வாறு நாம் உண்ணும் உணவோ அல்லது ஏதேனும் பொருளோ தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுப் பாதையில் தடையை ஏற்படுத்துவதை "சோக்கிங்"(CHOKING) என்று அழைக்கிறோம்.
இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் இதற்குண்டான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது சிறந்தது. உணவாலோ, வேறு பொருட்களாலோ சுவாசப்பாதை அடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலில் இருப்பவர்களால் இரும முடிந்தால் அவர்களைத் தொடர்ந்து இருமுவதற்கு பணிப்பது நல்லது.
"இருமல்" என்பது சுவாசப் பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் பொருளை வெளியே கொண்டு வரும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை அந்த நபரால் இருமவோ பேசவோ கத்தவோ முடியாத நிலையில் இருப்பின் உடனே நாம் செய்ய வேண்டியது அவருக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு நமது கரங்களில் அவரது மார்புப் பகுதியைத் தாங்கிக் கொண்டு
அவரை இடுப்புப் பகுதியில் குனிவதற்குப் பணித்து அவரது பின் புறத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில் நன்றாக உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அடைப்பு சரியாகும் வாய்ப்பு அதிகம். இந்த செயல்முறையில் பலன் கிட்டாவிடில் நாம் செய்ய வேண்டியது "ஹெம்லிச் செயல்முறை" அது என்ன? எப்படி செய்வது? மூச்சுத் திணறல் ஏற்பட்டவரின் பின் புறம் நின்று கொண்டு அவரது இடுப்பை பின்புறத்தில் இருந்து ஒரு கைகொண்டு அணைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவது போல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இணைத்து கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப் பகுதியில் இருக்குமாறு வைக்க வேண்டும்.
இப்போது மற்றொரு கையை பின்புறத்தில் இருந்து முன்பக்கமாக அவரை அணைத்து இன்னொரு கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும். இப்போது வேகமாக அழுத்தமாக மேல்நோக்கி இரண்டு கைகளையும் வயிற்றுப் பகுதியில் அழுத்தித் தூக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது அந்த நபரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இந்த செயல்முறை அமையும்.
இவ்வாறு தொடர்ந்து வேகமாக ஐந்து முறை செய்ய வேண்டும். மேற்கூறிய பின்பக்கம் தட்டுதலை ஐந்து முறையும் இந்த ஹெம்லிச் செயல்முறையை ஐந்து முறை என்று தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்கிடையில் மூச்சுத்திணறலுக்கு உள்ளானவர் மூர்ச்சை நிலைக்குச் சென்றால் அவரை கீழே அவரது முதுகுப் பகுதி தரையில் கிடக்குமாறும் அவரது கைகள் இருபுறமும் இருக்குமாறும் கிடத்தி அவரது வாயை நோக்க வேண்டும்.
உங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திய உணவுப் பொருள் அல்லது வேறு பொருள் கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் அதை கைவிட்டு லாவகமாக எடுக்க வேண்டும். கண்ணால் அந்த பொருளை பார்க்காமல் கையை விட்டு எடுக்க முயற்சி செய்யக் கூடாது. மேற்கொண்டு அந்தப் பொருளை உள்ளே தள்ளி விட்டு அதனால் மேற்கொண்டு சுவாசப்பாதை அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.
அந்த நபருக்கு மூச்சு இல்லாத நிலை இருப்பின் தொடர்ந்து சிபிஆர் எனும் உயிர்காக்கும் இதய மற்றும் சுவாசப்பாதை மீட்பு முதலுதவியை வழங்கி வர வேண்டும். ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது நமது கைகளை இணைத்துக் கொண்டு நமது வயிற்றுப் பகுதியில் வைத்து கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும்.
அந்த கடினமான தளம் என்பது நாற்காலியாக இருக்கலாம் அல்லது மேஜையாக இருக்கலாம். பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் அவர்கள் எளிதில் வாய்க்குள் போட்டுக் கொள்ளாத அளவில் விளையாட்டுப் பொருட்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம்மில் யாருக்கேனும் திடீரென உணவு சாப்பிடும் போது இத்தகைய சுவாசப்பாதை அடைப்பு ஏற்பட்டால் மேற்கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்” என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.