மார்பக அளவு, நிப்பிள்ஸ் லெவல்... மார்பக புற்றுநோய் ஆரம்ப அறிகுறி இதுதான்; உஷார் பெண்களே..! டாக்டர் சுதா
மார்பக புற்றுநோய்கள் குறித்து பெண்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என மருத்துவர் சுதா தெரிவித்துள்ளார். இவற்றை கண்டறிவதற்கான வழிமுறைகளையும் அவர் பரிந்துரைத்துள்ளார். இக்குறிப்பில் அவற்றை பார்க்கலாம்.
இந்தியாவில் பெண்களின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருப்பது மார்பக புற்றுநோய் என மருத்துவர் சுதா தெரிவித்துள்ளார். மார்பக புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து எவ்வாறு சிகிச்சை அளித்து, அப்பெண்ணின் வாழ்நாளை அதிகரிப்பது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மார்பகங்களை மாதம் ஒரு முறை சுயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர் சுதா அறிவுறுத்துகிறார். அதன்படி, இரண்டு மார்பகங்களும் ஒரே வடிவத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏதாவது ஒரு மார்பகத்தில் கட்டி இருந்தால், அந்தப் பகுதி பெரிதாக தெரியும். நிப்பிள் பகுதிகளும் ஒரே அளவில் தான் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். மார்பகத்தை சுற்றியிருக்கும் சருமமும் சீராக இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல், பெண்கள் தங்கள் மார்பகங்களை தடவி பார்க்க வேண்டும். இப்படி பார்க்கும் போது கட்டி இருப்பதை போன்று தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இப்படி செய்யும் போது மார்பு பகுதிகளில் வலி ஏற்பட்டாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மேலும், காம்பு பகுதிகளில் இருந்து நீர் வடிந்தாலோ அல்லது இரத்தக் கசிவு இருந்தாலோ புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
மம்மோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறிந்து விடலாம் என மருத்துவர் சுதா குறிப்பிட்டுள்ளார். மம்மோகிராம் பரிசோதனையை 40 வயதைக் கடந்த பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார். இந்த பரிசோதனைகள் மூலம் சாதாரண கட்டிகளுக்கும், புற்றுநோய் கட்டிகளுக்கும் இடையே வித்தியாசத்தை கண்டறிந்து விடலாம் என மருத்துவர் சுதா குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisement
இவ்வாறு பரிசோதனை செய்ததில் சாதாரண கட்டிகள் இருந்தால், அவற்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி விடுவார்கள். அதுவே புற்றுநோய் கட்டியாக இருந்தால், மார்பகத்தை அகற்ற வேண்டிய சூழல் உருவாகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பின்னர் நோயாளிகளுக்கு, கீமோதெரபி, ரேடியேஷன் ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, பாதிப்புகள் சிறியதாக இருக்கும் போதே கண்டறிந்து முறையான சிகிச்சைகள் மேற்கொள்ளுதல் அவசியம் என்று மருத்துவர் சுதா வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - JP Multispeciality Hospital Youtube Channel